இலங்கை கடற்படையினர் நேற்று கைது செய்துள்ள தமிழக மீனவர்கள் 34 பேரையும் விடுவிப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தித் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இந்திய மத்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெய்சங்கருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நேற்று அதிகாலை இரணைத்தீவை அண்மித்த கடற்பகுதியில் கடற்படையினர் தமிழக மீனவர்களை கைது செய்தனர்.
அவர்களுடன், சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைக்காக பயன்படுத்தப்பட்ட மூன்று படகுகளும், கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.
இதனிடையே எதிர்வரும் 05ஆம் திகதி வரை இந்த மீனவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த பின்னணியில் தமிழக முதலமைச்சர் மீனவர்களை விடுவிக்க வலியுறுத்திக் கடிதம் அனுப்பியுள்ளார்.
இராஜதந்திர நடவடிக்கைகளை விரைவுபடுத்தி மீனவர்களை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
தமிழக முதலமைச்சர் இதற்கு முன்னரும் மீனவர் விவகாரம் தொடர்பில் பல கடிதங்களை கலாநிதி எஸ். ஜெய்சங்கருக்கு அனுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.








