கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மூவர் யாழ்ப்பாணத்தில் காருடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களை விசாரணைக்காக கொழும்பிலிருந்து வந்த விசேட பொலிஸ் குழு கொழும்புக்கு அழைத்து சென்று நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
மூவரும் கைது செய்யப்படும் போது, காரினுள் அவர்களின் ஆடைகள் எதுவும் இல்லாத நிலையில், இலட்ச ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு இன வளர்ப்பு நாய் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது. அதனையும் பொலிஸார் கொழும்புக்கு அழைத்து செல்ல உள்ளனர்.
கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு, வீதியில் நடந்து சென்ற நபர் ஒருவர்மீது பின்னால் வந்த நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தி, பின்னர் கார் ஒன்றில் ஏறி தப்பிச் சென்றார்.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமராக்களில் பதிவாகி இருந்தது.
சம்பவத்துக்குப் பிறகு, குறித்த கார் கொழும்பு ஆமர் வீதியில் கைவிடப்பட்டு, சந்தேகநபர்கள் வேறு வாகனத்தில் யாழ்ப்பாணம் நோக்கி தப்பிச் சென்றனர். கார் வாடகைக்கு எடுக்கப்பட்டிருந்த நிறுவனம் மூலம் தகவல் பெற்ற பொலிஸார், வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த GPS உதவியுடன் காரை கண்காணித்தனர்.
அதன் அடிப்படையில், கார் மானிப்பாய் பகுதியில் உள்ள வாகன திருத்தகத்தில் நிறுத்தப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. சம்பவ இடத்திற்குச் சென்ற யாழ்ப்பாண குற்றத்தடுப்பு பிரிவினர் காரை மீட்டதுடன், அதில் இருந்த மூவரையும் வாகன திருத்தக உரிமையாளரையும் கைது செய்தனர்.
திருத்தக உரிமையாளர், காரில் ஏசி பழுதடைந்ததால் அதைச் சரிசெய்யவே கொண்டு வந்ததாக தெரிவித்ததால், விசாரணையின் பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார்.
கைது செய்யப்பட்ட மூவரில் ஒருவர் பெண் ஆவார். விசாரணையில், அவர்கள் யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா வந்ததாக தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட பெண், ஆண் சந்தேகநபர்களில் ஒருவரின் காதலி என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பிலிருந்து வந்த விசேட பொலிஸ் குழு நேற்று நள்ளிரவு யாழ்ப்பாணத்தை அடைந்து, கைது செய்யப்பட்ட மூவரையும், காரையும், அவர்களுடன் இருந்த வளர்ப்பு நாயையும் பொறுப்பேற்று, மேலதிக விசாரணைக்காக கொழும்புக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுத்துள்ளனர்.








