கொழும்பு – பொல்கசோவிட்ட, கிரிகம்பமுனு பகுதியில் உள்ள வீடொன்றில், 75 வயதுடைய ஆண் ஒருவர் தனது 69 வயதுடைய மனைவியை நைலான் நூலால் தூக்கிலிட்டு கொலை செய்த பின்னர் தானும் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
இருவரின் மகளும் அவரது கணவரும் ஹோமாகம மேல் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கொன்றிற்காகச் சென்றிருந்த வேளையிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. மகள் வீடு திரும்பியபோது கொடூரச் சம்பவத்தை கண்டு உடனடியாக பொலிஸாருக்கு தகவல் அளித்துள்ளார்.
சம்பவத்தில் உயிரிழந்த பெண் சுமார் 10 ஆண்டுகளாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு, கடந்த மூன்று மாதங்களாக படுக்கையிலேயே இருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், கணவர் சில மாதங்களுக்கு முன்பும் மனைவியை இதே முறையில் கொலை செய்ய முயன்றதாகவும், ஆனால் அது தோல்வியடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொலைக்கு முன்பு, குறித்த நபர் தனது வாழ்வாதாரத்திற்காக பயன்படுத்திய புல்வெட்டும் இயந்திரத்தை விற்று பெற்ற பணத்தில் மது அருந்தியிருந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.







