மட்டக்களப்பு நகரில் சாப்பாட்டு கடை ஒன்றில் வாங்கிய மதிய உணவான சோற்று பாசலில் புழு உள்ளதை கண்டு சட்டத்தரணி ஒருவர் சுகாதார அதிகாரிகளுக்கு முறைப்பாடு செய்துள்ளார்.

நேற்று சனிக்கிழமை முறைப்பாடு செய்ததையடுத்து உடனடியாக  குறித்த கடையை சோதனையிட்ட பொது சுகாதரா பரிசோதகர்கள் மனித பாவனைக்கு உதவாத உணவு தயாரிக்கும் பொருட்களை மீட்டதுடன்  கடை உரிமையாளருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு பதிவு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.

குறித்த கடையில் வழமையாக மதிய உணவான சோற்றுப் பாசலை சட்டத்தரணி ஒருவர் வாங்கி சாப்பிட்டு வந்த நிலையில் சம்பவதினமான நேற்று சனிக்கிழமை பகல் 2.00 மணியளவில் மதிய உணவான சோற்று பாசலை வாங்கி சாப்பிட்டுக் கொண்டிருந்த போது அதில் உள்ள கரட் கறியில் புழு ஓடுவதை கண்டுள்ளார்.

இதனையடுத்து குறித்த சாப்பாட்டு பாசலுடன் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரிகள் காரியாலயத்துக்கு சென்று குறித்த கடைக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து உடனடியாக பொது சுகாதார பரிசோதகர்கள் குறித்த கடையை முற்றுகையிட்டதில் அங்கு மனித பாவனைக்கு உதவாத உணவு மற்றும் சிற்றுண்டிகள் தயாரிக்கும் பல உணவு பொருட்களை குளிரூட்டியில் இருந்து கைப்பற்றியுள்ளனர்.

மனித பாவனைக்கு உதவாத பொருட்களை கொண்டு  உணவு தயாரிக்க வைத்திருந்தமை மற்றும் மதிய உணவான சோற்று பாசலில் புழு இருந்தமை தொடர்பாக  இரண்டு குற்றச்சாட்டுக்கள் கடை உரிமையாளருக்கு எதிராக நீதிமன்றில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (27.05.2025) வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை கடந்த காலங்களில் குறித்த உணவு விற்பனை செய்துவரும் கடையில் இருந்து மனித பாவனைக்கு உதவாத உணவுகள் தயாரித்தமை, மற்றும் உணவு தயாரிப்பதற்காக பொருட்களை வைத்திருந்தமை, சுகாதார சீர்கேடாக உணவுகளை கையாண்டமை போன்ற பல குற்றச்சாட்டின் கீழ் பொது சுகாதார பரிசோதகர்கள் அதன் உரிமையாளருக்கு எதிராக நீதிமன்றில் பல வழக்கு தாக்கல் செய்யப்பட்டு அவரை தண்டப் பணம் செலுத்துமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்து தீர்ப்பளித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

[மட்டக்களப்பு நிருபர் – கனகராசா சரவணன்]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here