அமெரிக்கா – ஈரான் போர் மோதல் தணியும் என உலக சந்தையில் நிலவும் எதிர்பார்ப்பு காரணமாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளது.
அதன்படி, பிரெண்ட் (Brent) கச்சா எண்ணெய் விலை கடந்த வாரத்தில் சுமார் 16 சதவீதத்தால் குறைந்துள்ளது. இது 2020 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒரு வாரத்தில் பதிவான மிகப்பெரிய விலை வீழ்ச்சி என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அதேபோல், மேற்கு டெக்சாஸ் இடைநிலை (WTI) கச்சா எண்ணெய் விலையும் ஒரு வாரத்தில் சுமார் 12 சதவீதத்தால் குறைந்துள்ளது.
இதற்கமைய, இன்று காலை நிலவரப்படி பிரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை 98 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது. WTI கச்சா எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை 90 அமெரிக்க டொலர்களுக்கு அருகில் காணப்படுவதாக குறிப்பிடப்படுகிறது.
கச்சா எண்ணெய் விலை இவ்வாறு குறைவதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அமெரிக்க இடைக்கால தேர்தலில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் குடியரசுக் கட்சி தோல்வியடைந்ததை தொடர்ந்து, ஈரானுடனான போர் மோதல் முடிவுக்கு வரும் என சந்தையில் ஏற்பட்டுள்ள எதிர்பார்ப்பு ஒரு காரணமாகும் என குறிப்பிடப்படுகிறது.
அதேபோல், மத்திய கிழக்கு பிராந்தியத்திலிருந்து உலக சந்தைக்கு கிடைக்கும் கச்சா எண்ணெய் விநியோகம் ஓரளவு அதிகரித்தமையும் விலை குறைவதற்கு காரணமாக அமைந்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.








