ஐக்கிய நாடுகள் சபையின் சித்திரவதைகளை தடுப்பதற்கான உபகுழு (SPT) 7 ஆண்டுகளுக்குப் பின்னர் ஜூன் 15 முதல் 24 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இலங்கையில் ஆய்வு நடத்தவுள்ளது.
இலங்கையில் தடுத்து வைக்கப்படும் நபர்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் சீர்திருத்தங்கள் தொடர்பில் அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை மதிப்பிடுவதே இதன் நோக்கமாகும் என ஐ.நாவின் இலங்கை அலுவலகம் தெரிவித்துள்ளது.
“2019-ஆம் ஆண்டு எமது கடைசி வருகைக்குப் பின்னர், இலங்கை அரசு, தடுத்து வைக்கப்படுபவர்களுக்கான தேசிய பாதுகாப்பு பொறிமுறையை அமைத்துள்ளது. இது சித்திரவதைகளை தடுப்பதில் முக்கிய முன்னேற்றமாகும்” என குறித்த குழுத் தலைவர் ஐஷா ஷுஜுனே முகமது தெரிவித்தார்.
இந்த வருகையின் போது, தடுத்து வைக்கப்படும் இடங்களுக்கு முன்னறிவிப்பின்றி சென்று பார்வையிடுவதுடன், அரச அதிகாரிகள், தேசிய தடுப்பு பொறிமுறை உறுப்பினர்கள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகளை குழு சந்திக்கும்.
இந்த விஜயத்தின் முடிவில், OPCAT சட்டப்பிரிவு 16-இன் படி, ஆரம்பகட்ட அவதானிப்புகளை இலங்கை அரசிடமும் குறித்த தேசிய பொறிமுறையிடமும் ரகசியமாக கையளிக்கப்படும். பின்னர் ஆய்வில் கண்டறிந்தவை மற்றும் பரிந்துரைகள் அடங்கிய ரகசிய அறிக்கை அரசுக்கு வழங்கப்படும்.
இலங்கை அரசு அவற்றை கோரும் பட்சத்தில் மாத்திரமே அறிக்கை வெளியிடப்படும். எவ்வாறாயினும் 2019 விஜயத்தின் அறிக்கை இதுவரை வெளியிடப்படவில்லை என குறித்த குழு மேலும் தெரிவித்துள்ளது.
இலங்கை 2017-ஆம் ஆண்டு சித்திரவதைக்கு எதிரான மாநாட்டின் விருப்ப புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (OPCAT) இணைந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.






