ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியில் லங்காபடுன சந்திக்கு அருகில் சிறிய ரக லொறியொன்று பாரவூர்தியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்து நேற்று சனிக்கிழமை (16.11.2024) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் மத்துகம, ஹல்வல பிரதேசத்தில் வசித்த 40 வயதுடைய கடற்படை சிப்பாய் ஆவார்.
பானமவிலிருந்து சாம்பூர் நோக்கி சென்றுகொண்டிருந்த கடற்படைக்கு சொந்தமான பாரவூர்தி இயந்திரக் கோளாறு காரணமாக இடைநிறுத்தப்பட்டு, அதன் சாரதி பாரவூர்தியில் இருந்து இறங்கி வாகனத்துக்கு அடியில் வாகன திருத்தப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, மட்டக்களப்பிலிருந்து திருகோணமலை நோக்கிச் சென்ற சிறிய ரக லொறி, பாரவூர்தியின் பின்புறம் மற்றும் சாரதி மீது மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த பாரவூர்தி சாரதி ஈச்சிலம்பற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னரே உயிரிழந்துள்ளார்.
சடலம் ஈச்சிலம்பற்று வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் ஈச்சிலம்பற்று பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.








