2020ஆம் ஆண்டு ஒக்டோபரில் சீனிக்காக விதிக்கப்பட்ட 50 ரூபாய் வரியினை 25 சதம் வரை குறைத்த விடயம் தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணைகளில் எவ்விதமான குற்றவியல் குற்றமும் கண்டறியப்படவில்லை எனச் சட்டமா அதிபரினால் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறியப்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு கொழும்பு மேலதிக நீதவான் கெமிந்த பெரேரா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது இவ்வாறு அறியப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, விசாரணைகளை நிறைவு செய்வதற்கு அனுமதி வழங்கிய நீதவான், இந்தச் சம்பவத்தில் ஏதேனும் முறைகேடுகள் அல்லது கையூட்டல் இடம்பெற்றிருக்குமாயின், அது தொடர்பான ஆவணங்களைச் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அனுப்பி விசாரணைகளை முன்னெடுப்பதற்கான சாத்தியம் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

2020ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 13 ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் சீனிக்காக விதிக்கப்பட்ட 50 ரூபாய் வரியை 25 சதமாகக் குறைப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானத்தின் மூலம் அரசாங்கத்திற்கு ஏதேனும் இழப்பு ஏற்பட்டதா? என்பதைக் கண்டறிவதற்கு விசாரணை நடத்துமாறுக் கோரி முறைப்பாடு அளிக்கப்பட்டது.

சீனிக்கான வரியைக் குறைக்கும் தீர்மானத்தின் ஊடாக அரசாங்கத்திற்கு 1,600 கோடி ரூபாவுக்கும் அதிக நட்டம் ஏற்பட்டதாகவும், குறைக்கப்பட்ட வரியின் வரப்பிரசாதம் பொதுமக்களுக்குப் பெற்றுக்கொடுக்கப்படாது பாரியளவிலான சீனி வரி மோசடி இடம்பெற்றுள்ளதாகவும் பல்வேறு தரப்பினரால் குற்றஞ்சாட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here