சுகாதாரம் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் இலங்கைக்கான சவுதி அரேபியா இராச்சியத்தின் தூதர் அதிமேதகு காலித் ஹமூத் நாசர் அல்கஹ்தானி ஆகியோருக்கிடையிலான சந்திப்பு சமீபத்தில் சுகாதார அமைச்சில் நடைபெற்றது.
இலங்கை – சவுதி அரேபியா இரு நாடுகளுக்குமிடையிலான நீண்டகால நட்புறவு, நாட்டின் சுகாதார சேவையின் எதிர்கால முன்னேற்றத்திற்கான தேவையான ஆதரவு குறித்து இச்சந்திப்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
மேலும், இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது, ஊடகத் துறையை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் தொடர்பிலும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.
இந்நிகழ்வில், வீண்விரயம், மோசடி மற்றும் ஊழல் இல்லாத மக்களுக்கான சுகாதார சேவையை உருவாக்க அரசாங்கம் எடுத்துள்ள புதிய கொள்கைக்கு சவுதி அரேபியா தனது பாராட்டுகளைத் தெரிவித்தது. அதேவேளை, சுகாதாரம் மற்றும் ஊடகத் துறைகளின் முன்னேற்றத்திற்கான ஆதரவை தொடர்ந்து வழங்குவதாக தூதர் உறுதியளித்தார்.
சவுதி அரேபியா அரசு வழங்கி வரும் நிலையான ஒத்துழைப்பை நினைவு கூர்ந்த அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, எதிர்காலத்திலும் மேலும் ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினார். அதேசமயம், இதுவரை வழங்கப்பட்ட ஆதரவுக்கு சவுதி அரேபியா தூதருக்கு நன்றியையும் தெரிவித்தார்.








