ஜனாதிபதியின் பொதுமன்னிப்பைத் தவறாகப் பயன்படுத்தி இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் முழுமையான விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன என அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது இதன் போதே அவர் இதனை தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
ஜனாதிபதியின் பொதுமன்னிப்புக்காக நீதி அமைச்சின் செயலாளர் மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் ஆகியோருக்கு அனுப்பப்பட்ட பட்டியலில் பெயர் இடம் பெற்றிருக்காத கைதியொருவர் அண்மையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
இதனையடுத்தே இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இவ்வாறான குற்றச்செயல்கள் மிகவும் நீண்டநாள்களாக இடம்பெற்றுள்ளன. இத்தகைய குற்றச்செயல்களுக்கு எதிராகத் தற்போது முழுமையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சிறைச்சாலைத் திணைக்களத்தில் மட்டுமல்ல ஏனைய திணைக்களங்களிலும் இப்படி நடந்திருந்தால் அவை தொடர்பிலும் விசாரணைகளில் தெரியவரும்.
தவறிழைத்த அதிகாரிகள்தான் பயப்பட வேண்டும். தவறிழைக்காமல், நேர்மையாகச் செயற்படும் அரச அதிகாரிகள் எதற்கும் அஞ்சவேண்டியதில்லை.
அவர்கள் சுதந்திரமாகச் செயற்படமுடியும். அரசாங்க அதிகாரிகள் சுதந்திரமாக செயற்படவேண்டும் என்பதற்காகவே தவறிழைக்கும் அதிகாரிகளை அடையாளங்காணும் முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டார்.








