ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் இரு வாரங்களே உள்ள நிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இவ்வாரம் இறுதியில் நாட்டு மக்களுக்கு விசேட அறிவிப்பினை விடுக்கவுள்ளார். மேலும் அரசாங்கத்தில் பொறுப்புகளில் இருந்துகொண்டு, பிற தரப்புகளுடன் தொடர்புபட்டு செயற்பட்ட 7 பேர் குறித்து ஜனாதிபதிக்கு தெரியப்படுத்தப்பட்டிருந்த நிலையில் அவர்களில் 4 பேர் உடனடியாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் மூன்று பேரை விலகிச் செல்லுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர, மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த, விவசாய இராஜாங்க அமைச்சர் மொஹொன் பிரியதர்ஷன டி சில்வா மற்றும் நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சர் சிறிபால கம்லத் ஆகியோரே பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
சுயேட்சை வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற நிலையில், அவரின் வெற்றிக்கு ஒத்துழைக்கும் வகையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உள்ளிட்ட பல முக்கிய கட்சிகளின் உறுப்பினர்கள் முன்வந்து செயல்படுகின்றனர்.
இவ்வாறானதொரு நிலையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஒருசில உறுப்பினர்கள் அரசாங்கத்தில் பதவிகளை பெற்றுக்கொண்டுள்ள போதிலும் அவர்கள் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான செயல்பாடுகளில் ஈடுபட்டு வந்தமை தெரியவந்துள்ளது. அவ்வாறு 7 பேர் இனங்காணப்பட்ட நிலையில், அவர்களில் நான்கு பேரை உடனடியாக பதவி நீக்கியும், ஏனைய மூவரை விலகுமாறும் அறிவிப்புகள் விடுக்கப்பட்டுள்ளன.
அத்துடன் எதிர்வரும் 21ஆம் திகதி ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்புகள் இடம்பெறவுள்ள நிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இவ்வாரம் நாட்டு மக்களுக்கு விசேட அறிவிப்பினை விடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.








