சந்திரனை நோக்கிய மனிதனின் பயணம் நாளுக்கு நாள் புதிய பரிணாமங்களை காண்கிறது. ஆனால், அதே நேரத்தில் சவால்களும் அதிகரிக்கின்றன.
நிலவில் அண்மையில் கடுமையான பிரச்சனைகளுக்கு மத்தியில் தரை இறங்கிய ஜப்பானின் ‘ரெஸிலியன்ஸ்‘ (Resilience) நிலா லேண்டரின் துரதிருஷ்டவசமான நிலையைக் காண்பிக்கும் புகைப்படங்களை, நாசாவின் லூனார் ரிகானிசன்ஸ் ஆர்பிட்டரும் (LRO) இந்திய விண்வெளி ஆய்வாய்வு மையத்தின் (ISRO) சந்திரயான்-2 ஆர்பிட்டரும் எடுத்துள்ளன.


ஜப்பானின் தனியார் நிறுவனமான ispace தயாரித்து இயக்கிய ‘ரெஸிலியன்ஸ்’ லேண்டர், இந்த ஜூன் 5ஆம் தேதி நிலாவின் வடக்குப் பகுதியிலுள்ள ‘மேர் ஃபிரிகோரிஸ்‘ (Mare Frigoris) பகுதியில் தரையிறங்க திட்டமிடப்பட்டது.
இதில் பல விஞ்ஞான கருவிகள் மற்றும் ஐரோப்பாவின் முதல் நிலா ரோவர் ‘டெனேசியஸ்‘ (Tenacious) மற்றும் ‘மூன்ஹவுஸ்’ என்ற கலைப் படைப்பு ஆகியவை கொண்டு செல்லப்பட்டன.
திட்டமிடப்பட்ட தரையிறக்கத்திற்கு சுமார் 100 வினாடிகளுக்கு முன்பு ஆபரேட்டர்கள் ரெசிலியன்ஸுடனான தொடர்பை இழந்தனர். இதனையடுத்து, அது நிலத்தில் கடுமையாக மோதியது. இதில் அதிகமாக சாய்ந்த நிலையில் லேண்டர் தரை இறங்கியதால், அனைத்து கருவிகளும் சேதமடைந்ததாக உறுதி செய்யப்பட்டது.
ஜூன் 11-ஆம் தேதி நாசா வெளியிட்ட புகைப்படங்களில், விபத்துக்கு முந்தைய மற்றும் பிந்தைய நிலா மேற்பரப்பை ஒப்பிட்டு பார்த்ததில், ஒரு இருண்ட தடம் தென்பட்டது. இது நிலத்தின் மேற்பரப்பில் உள்ள தூசி மற்றும் பாறைகளுடன் லேண்டர் மோதும் போது பறக்கச் செய்ததன் விளைவாக இருக்கலாம் என நாசா தெரிவித்துள்ளது.

ஜூன் 16-ஆம் தேதி, இந்தியாவின் சந்திரயான்-2 ஆர்பிட்டர் எடுத்த படங்களில் அந்த இடம் மேலும் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது. புகைப்படங்களை ஆய்வு செய்த தன்னார்வ அகவியலாளர் சண்முக சுப்பிரமணியன், குறைந்தபட்சம் 12 பாகங்கள் வரை அதில் காட்சியளிக்கின்றன என்று குறிப்பிட்டு, அவற்றை சமூக ஊடகமான ‘X’ல் பகிர்ந்துள்ளார். ஆனால் இந்த பாகங்கள் எவ்வளவு தொலைவில் சிதறியுள்ளன என்பது பற்றி இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
ரெஸிலியன்ஸ் தனது இறுதி தருணங்களில் நிலத்துடன் உள்ள தூரத்தை கணக்கிட பயன்படுத்திய லேசர் ரேஞ்ச் பைண்டர் தாமதமாக செயல்பட்டதாக தொலைதொடர்பு தரவுகள் கூறுகின்றன. இதனால் லேண்டர் நிலத்திலிருந்து பாதுகாப்பாக இறங்க தேவையான வேகக் குறைப்பைச் செய்ய முடியவில்லை என ispace தெரிவித்தது. ஜூன் 24 அன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், இவ்வீணடைவுக்கு காரணமாக லேசர் ரேஞ்ச் பைண்டரில் ஏற்பட்ட தொழிநுட்ப கோளாறு தான் என நிறுவனம் உறுதிப்படுத்தியது.
இதற்கு முன்னர், 2023 ஏப்ரலில் ‘ஹகுடோ-R’ தொடர் முதல் முயற்சியிலும் ispace லேண்டர் சந்தேகத்திற்கிடமாக நிலத்தில் மோதியது.
இந்நிலையில், ஜப்பான் விண்வெளி ஆய்வகம் (JAXA) அனுப்பிய ‘SLIM‘ (Smart Lander for Investigating Moon) லேண்டர் 2024 ஜனவரியில் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது. அது தலைகீழாக விழுந்தாலும் பல மாதங்கள் செயல்பட்டது குறிப்பிடத்தக்க விடயமாகும்.








