இலங்கை கிரிக்கட் அணியின் நட்சத்திர துட்டுப்பாட்ட வீரரும் பந்து வீச்சாளருமான ஏஞ்சலோ மெத்தியுஸ், சர்வதேச டெஸ்ட் தொடர்களில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார்.
இது குறித்த அறிவிப்பை அவர் தனது சமூக வலைத்தளங்கள் ஊடாக இன்று வெள்ளிக்கிழமை (23.05.2025) வெளியிட்டுள்ளார்.
இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவரான ஏஞ்சலோ மெத்தியுஸ் பங்களாதேஷ் அணிக்கு எதிராக தனது இறுதி போட்டியில் விளையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டி தொடர் எதிர்வரும் ஜூன் மாதம் 17ம் திகதி முதல் 21ம் திகதி வரை காலியில் நடைபெறவுள்ளது.
இந்த தொடரின் பின்னர் தான் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளமை இலங்கை கிரிக்கட் இரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
1987 ம் ஆண்டு கொழும்பில் பிறந்த ஏஞ்சலோ மெத்தியுஸ் தன்னுடைய கல்வியை புனித யோசப் பாடசாலையில் கற்றிருந்தார். 37 வயதை கடந்த ஏஞ்சலோ மெத்தியுஸ் வலதுகை துடுப்பாட்ட வீரராகவும் வலது கை மித வேக பந்து வீச்சாளராகவும் சகல துறை ஆட்டக்காரர் ஆகவும் திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார்.
2013 தொடக்கம் 2017 வரை அணித்தலைவராக செயல்பட்டவர்.
ஏஞ்சலோ மெத்தியுஸ் இதுவரை 118 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 8 ஆயிரம் 167 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். அத்துடன் 118 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 33 விக்கட்டுக்களை வீழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் 226 ஒருநாள் போட்டிகளில் 5,916 ரன்கள் எடுத்து , 3 சதங்கள் அடித்துள்ளார். பந்து வீச்சில் 120 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். மேலும் 90 டி20 போட்டிகளில் 1,416 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 6 அரைசதங்களையும் அடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவர் 2010-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் லசித் மாலிங்காவுடன் இணைந்து 9-வது விக்கெட் பார்ட்னர்ஷிப்பில் 132 ரன்கள் எடுத்து உலக சாதனையையும் படைத்துள்ளார்.
இவர் 2015 ஆம் ஆண்டின் விஸ்டன் கிரிக்கெட் வீரர் , 2015 ஆம் ஆண்டின் இலங்கை கிரிக்கெட் வீரர், மே 2022க்கான ஐசிசி மாத ஆண்கள் வீரர். என்ற விருதுகளையும் பெற்றுள்ளார்.
ஏஞ்சலோ மேத்யூஸ் இன் சர்வதேச டெஸ்ட் வாழ்க்கை முடிவுக்கு வந்தாலும், இவர் இலங்கை கிரிக்கெட்டின் ஒரு முக்கியமான அத்தியாயமாகும்.








