உலகின் மிகப் பெரிய கௌரவமான நோபல் பரிசுகள் வழங்கும் காலம் தொடங்கியுள்ளது. ஸ்வீடன் விஞ்ஞானி ஆல்பிரெட் நோபல் நினைவாக, ஆண்டுதோறும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய ஆறு துறைகளில் சிறந்தோர் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
இவ்வாண்டுக்கான அறிவிப்புகள் இன்று முதல் அக்டோபர் 13ஆம் தேதி வரை நடைபெறவிருக்கின்றன. அதில் முக்கியமான அமைதிக்கான நோபல் பரிசு அக்டோபர் 10ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளது.
இந்த நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், “அமைதிக்கான நோபல் எனக்கே கிடைக்க வேண்டும்” எனத் தன்னைத்தானே பரிந்துரைத்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அவர், தாம் இந்தியா–பாகிஸ்தான், கம்போடியா–தாய்லாந்து, இஸ்ரேல்–ஈரான், கொசோவோ–செர்பியா, எகிப்து–எத்தியோப்பியா உள்ளிட்ட பல நாடுகளுக்கிடையிலான மோதல்களை நிறுத்தியதாகக் கூறி வருகிறார். மேலும் உக்ரைன்–ரஷ்யா, காசா–இஸ்ரேல் போர்களையும் முடிவுக்கு கொண்டுவர முயற்சி செய்து வருவதாக தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, பாகிஸ்தான், இஸ்ரேல், கம்போடியா, அர்மேனியா, அஜர்பைஜான் போன்ற நாடுகள் ட்ரம்பின் பெயரை ஆதரித்து நோபல் குழுவுக்கு பரிந்துரைக் கடிதங்களை அனுப்பியுள்ளன.
ஆனால், நோபல் குழுவின் விதிகளின்படி, ஜனவரி 31க்குப் பிறகு அனுப்பப்பட்ட பரிந்துரைகள் செல்லாது. எனவே, ட்ரம்பின் பெயர் 2025 பரிசுக்காக அல்ல, 2026 பரிசுக்காக மட்டுமே பரிசீலிக்கப்படும் என கூறப்படுகிறது.
மேலும், நோர்வே அமைதி ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் நினா கிரேகர், “ட்ரம்புக்கு இந்த ஆண்டு நோபல் கிடைக்கும் வாய்ப்பு மிகக் குறைவு” என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நோபல் குழுவின் சில உறுப்பினர்களே ட்ரம்பின் பரிந்துரைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவருக்கு நோபல் கிடைக்காவிட்டால், நோர்வே–அமெரிக்க உறவுகளில் சிக்கல்கள் ஏற்படலாம் என்றும், வர்த்தக வரிகள் கூட அதிகரிக்கலாம் என்ற கவலையும் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பட்டியலில் 338 பேர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். அதில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், நேட்டோ, ஹாங்காங் ஆர்வலர் சௌ ஹாங்-டங், மற்றும் மனித உரிமை சட்டத்தரணி இர்வின் கோட்லர் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.








