இலங்கை தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவிற்கு தலைவர் நியமிக்காமல் காலியிடமாக வைத்திருப்பதற்கெதிராக, உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனு, ஒரு ஊடகவியலாளர் மற்றும் ஒரு சமூக அமைப்பினால் தாக்கல் செய்யப்பட்டதாக ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
மனுவில், ஜனாதிபதி, ஜனாதிபதியின் செயலாளர், சபாநாயகர், அரசியலமைப்பு சபை உறுப்பினர்கள் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
தகவல் அறியும் ஆணைக்குழுவின் தலைவர் பதவி கடந்த ஆறு மாதங்களாக காலியாக இருப்பதாகவும், முன்னாள் தலைவர் ஓய்வுபெற்ற நீதியரசர் உபாலி அபேரத்ன ராஜினாமா செய்ததிலிருந்தே இந்த நிலைமை நிலவுவதாகவும் மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
நியமன அதிகாரம் ஜனாதிபதியிடம் இருந்தும், பதிலாளரையாவது நியமிக்க கூட எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் மனுவில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இதனால் தகவல் கோரிக்கைகள் தொடர்பான இறுதி முடிவுகளை வெளியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இது மனுதாரர்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக, தகவல் ஆணைக்குழுவிற்கு தலைவர் நியமிக்க ஜனாதிபதிக்கும் அரசியலமைப்பு சபைக்கும் உயர் நீதிமன்றம் உத்தரவிடவேண்டும் என மனுதாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.








