கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கையின் போது 6 முதல் 9 ஆம் வகுப்பு வரையான தமிழ் மொழிமூல மாணவர்களுக்கு சிங்கள மொழியையும், சிங்கள மொழிமூல மாணவர்களுக்குத் தமிழ் மொழியையும் இரண்டாம் மொழிப் பாடமாகக் கட்டாயமாக்குவது தொடர்பில் கலந்துரையாடி வருவதாகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் முன்வைத்த கேள்விக்குப் பதிலளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது சகல பாடசாலைகளிலும் 6 முதல் 9 ஆம் வகுப்பு வரையான தமிழ் மொழிமூல மாணவர்களுக்கு சிங்கள மொழியும், சிங்கள மொழி மூல மாணவர்களுக்குத் தமிழ் மொழியும் இரண்டாம் மொழிப் பாடமாகக் கற்பிக்கப்படுகிறது.
இதுதவிர 10 ஆம் மற்றும் 11 ஆம் வகுப்புகளில் பயிலும் தமிழ் மொழிமூல மாணவர்களுக்கு இரண்டாம் மொழியாக சிங்கள மொழியையும், சிங்கள மொழி மூல மாணவர்களுக்குத் தமிழ் மொழியையும் தெரிவு செய்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
அதேநேரம், 2026 ஆம் ஆண்டு முதல் 6 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பாடத்திட்டங்கள் மாற்றப்படவுள்ளதுடன், அதற்கு அடுத்த ஆண்டுகளில் ஏனைய வகுப்புகளின் பாடத்திட்டத்தை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
இதனையடுத்து தொடர்ந்து கேள்வி எழுப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார், தமிழ் மொழி மூல மாணவர்கள் சிங்கள மொழியையும், சிங்கள மொழிமூல மாணவர்கள் தமிழ் மொழியையும் இரண்டாம் மொழிப் பாடமாகக் கற்க வேண்டும் என்ற விடயம் கட்டாயமாக்கப்படுமா? என்று வினவினார்.
இதற்குப் பதிலளித்த பிரதமர் ஹரிணி அமரசூரிய, வேறு மொழிகளை கற்றுக் கொள்வது முக்கியமான விடயம் என்பதால், மறுசீரமைப்பு நடவடிக்கையின் போது 6 முதல் 9 ஆம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு அந்த நடவடிக்கையைக் கட்டாயமாக்குவது தொடர்பில் கலந்துரையாடப்படுவதாகத் தெரிவித்தார்.
அதேநேரம் வகுப்பறைக்கு வெளியிலும் வேறு மொழிகளை கற்பதற்கான சந்தர்ப்பத்தை மாணவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுப்பதற்கு எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.







