மத்திய கிழக்கு மோதல் காரணமாக உலக பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை அடுத்து, இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மையை வலுப்படுத்தும் நோக்கில் ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) 200 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி வழங்க தீர்மானித்துள்ளது.
இந்த நிதியுதவி, இலங்கையின் வர்த்தகம், முதலீடு மற்றும் தொழில்துறை அபிவிருத்தியை இலக்காகக் கொண்ட கொள்கை அடிப்படையிலான கடன் திட்டத்தின் கீழ் வழங்கப்படவுள்ளது.
அவற்றில் 100 மில்லியன் டொலர் மத்திய கிழக்கு நெருக்கடி காரணமாக நாட்டிற்கு ஏற்பட்டுள்ள பொருளாதார அழுத்தத்தை குறைப்பதற்கான மேலதிக நிதியுதவியாக ஒதுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மாசாடோ கண்டா (Masato Kanda) கருத்து தெரிவிக்கையில், “தொலைவில் உள்ள மோதலின் தாக்கம் காரணமாக எந்த குடும்பமும் மேலும் வறுமைக்குள் தள்ளப்பட கூடாது” என குறிப்பிட்டார்.
மேலும், இலங்கையில் வேலைவாய்ப்புகளை விரிவுபடுத்துதல், புதிய முதலீடுகளை ஈர்த்தல் மற்றும் வர்த்தகத்தை மேம்படுத்துதல் ஆகியவை இந்த திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த திட்டத்தின் கீழ் வர்த்தக முறைகளை நவீனப்படுத்துதல், சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகளின் போட்டித்திறனை அதிகரித்தல், பொருளாதார வலயங்களுக்கு முதலீடுகளை கொண்டு வருதல் மற்றும் ஏற்றுமதியை அதிகரித்தல் ஆகியவற்றுக்கான பல சீர்திருத்தங்கள் செயல்படுத்தப்படவுள்ளன.
இதற்கிடையில், மத்திய கிழக்கு மோதலின் பொருளாதார தாக்கங்களால் ஏற்படும் அதிகரித்த செலவுகள் மற்றும் நிச்சயமற்ற தன்மையை எதிர்கொள்ள, இலங்கை மற்றும் கம்போடியாவுக்கு மொத்தமாக 450 மில்லியன் டொலர் நிதியுதவி வழங்கவும் வங்கி தீர்மானித்துள்ளது. அதன்படி கம்போடியாவுக்கு 250 மில்லியன் டொலர் நிதியுதவி வழங்கப்படவுள்ளது.








