ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க ஜூன் 10 ஆம் திகதி ஜெர்மனிக்கு உத்தியோகபூர்வ அரச விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உர்ரையாற்றிய வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் இதனைத் தெரிவித்துள்ளார்.
குறித்த விஜயத்தின் போது ஜனாதிபதி அனுர குமாரதிசாநாயக்க ஜேர்மன் ஜனாதிபதியை சந்திப்பார் என்றும், இலங்கைக்கு வருகை தரும் ஜெர்மன் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்குத் தேவையான சாத்தியமான நடவடிக்கைகள் குறித்த கலந்துரையாடல்களில் கவனம் செலுத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
2025 ஆம் ஆண்டை “சுற்றுலா மறுமலர்ச்சி ஆண்டாக” அரசாங்கம் அறிவித்துள்ளது என்றும், இந்த ஆண்டு இறுதிக்குள் சுற்றுலாத் துறையிலிருந்து 5 பில்லியன் அமெரிக்க டொலர் வருவாயை ஈட்ட திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
இலங்கையின் மிகப்பெரிய சுற்றுலா கண்காட்சியான “சுற்றுலா மறுமலர்ச்சி 2025” கண்காட்சி, ஜனாதிபதி அனுர குமாரதிசாநாயக்கவின் தலைமையில் இன்று திறந்து வைக்கப்பட்டது.
குறித்த கண்காட்சி திறப்பு விழாவில் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் செயலாளர் அருணி ரணராஜா, SLAITO தலைவர் நலின் ஜெயசுந்தர, இலங்கை சுற்றுலா மேம்பாட்டு பணியக தலைவர் புத்திக ஹேவாவசம் மற்றும் இலங்கைக்கான ஜெர்மன் தூதர் உட்பட சிறப்பு விருந்தினர்கள் குழுவும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.








