மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் சேவைகளை பெறும்போது, அதன் வளாகத்திற்கு அருகில் இருக்கும் தரகர்களுடன் தொடர்பு கொள்ள வேண்டாம் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தரகர்களுடன் தொடர்பு கொள்பவர்கள் தங்கள் பணத்தையும் முக்கியமான ஆவணங்களையும் இழக்க நேரிடும் என மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஒரு நாள் சேவைக்கான நேரங்களை முன்னதாகவே இணையதளம் மற்றும் தொலைபேசி மூலம் பெற்றுக்கொள்ள முடியும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாதாரண வாகன உரிமை மாற்றம் தொடர்பான ஆவணங்களை நாரஹேன்பிட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் மட்டுமன்றி, மாவட்ட செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களிலும் சமர்ப்பிக்க முடியும்.
அதிகாரப்பூர்வ நடைமுறைகளை பின்பற்றாது, தரகர்களின் வழிகாட்டுதலை பின்பற்றுபவர்கள் ஏமாற்றப்படலாம் என திணைக்களம் எச்சரித்துள்ளது.
எனவே, திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ நடைமுறைகளை மாத்திரமே பின்பற்றுமாறும், அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகளிடம் மாத்திரமே தகவல்களை பெறுமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.








