தாதியர் துறையில் பணியாற்றும் இஸ்லாமியப் பெண்கள், தங்களுடைய கலாசாரத்துக்கு ஏற்ப ஆடை அணிந்து பணியாற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு நாடாளுமன்றத்தில் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த கோரிக்கை, நாடாளுமன்ற உறுப்பினர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லா அவர்களால் முன்வைக்கப்பட்டது.
ஆனால், அரச துறையில் தாதியர்களின் ஆடை மாற்றம் சம்பந்தமாக இதுவரை எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை என அரசு தெரிவித்துள்ளது.
இன்று நாடாளுமன்றத்தில் பதிலளித்த அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, தாதியர்களின் ஆடை குறித்து 1992 ஆகஸ்ட் 7ஆம் திகதி ஹிஸ்புல்லா MP முன்வைத்த தனிநபர் யோசனைக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தாலும், அதற்கான நடைமுறைப்படுத்தலுக்கான அறிக்கைகள் சுகாதார அமைச்சில் இல்லை என குறிப்பிட்டார்.
கடந்த 33 ஆண்டுகளாக பல அரசாங்கங்கள் மாறியிருந்தாலும், அந்த யோசனையின் அடிப்படையில் ஆடை மாற்றம் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், அரச சுகாதாரத் துறையில் பணியாற்றுவோரின் ஆடை தொடர்பான முடிவுகளை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் தலைமையிலான ஆடைத் தொடர்பான குழு மட்டுமே எடுக்க முடியும்.
அந்த குழு, தனியார் துறை தாதியர்களின் ஆடை தொடர்பான முடிவுகளை எடுக்காது என்றும் அமைச்சர் விளக்கினார்.
அரச துறை தாதியர்களின் ஆடையை மாற்றுவது குறித்து இதுவரை எந்தத் தீர்மானமும் இல்லையெனவும், மாற்றம் தொடர்பான யோசனை எதுவும் இருந்தால், அது உரிய முறையில் ஆடைத் தொடர்பான குழுவில் முன்வைக்கப்பட வேண்டும் எனவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ வலியுறுத்தினார்.
நடப்பு நிலை, நடைமுறை சாத்தியங்கள் ஆகியவை ஆய்வு செய்யப்பட்ட பின்னர் மட்டுமே அந்தக் குழு பொருத்தமான தீர்மானம் எடுக்கும் என அவர் தெரிவித்தார்.








