இன்றைய சமூக அமைப்பில் மக்கள் அனைத்து வசதிகளையும் பெற்றிருந்தாலும், மன அமைதி மற்றும் ஆனந்தம் குறைவாக இருக்கின்றன “துன்பத்தை போக்கி மன அமைதியைப் பெற தியானம் மற்றும் யோகப் பயிற்சிகள் அவசியம்” என வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன், தெரிவித்துள்ளார்.

பிறவுண் வீதியில் அமைந்துள்ள அறிவுத் திருக்கோவிலின் ஒன்பதாம் ஆண்டு விழாவை முன்னிட்டு நேற்று (15) மாலை நடைபெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றிய ஆளுநர், தியானத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

அவர் கூறியதாவது:
“நமது இதிகாசங்கள் மற்றும் புராணங்கள் அனைத்தும் தியானத்தின் வழியாக ஆன்மீக உயர்வை அடைந்த முனிவர்களைப் பற்றி பேசுகின்றன. அதேபோல், இன்றைய காலத்திலும் தியானம் மக்களின் வாழ்க்கையில் அமைதி மற்றும் ஆரோக்கியத்தை உருவாக்குகிறது. தியானம் என்பது ஒரு செயல் அல்ல; அது ஒரு வாழ்க்கை நிலை. மனம் அமைதியாக இருந்தால், இயல்பாகவே ஆனந்தமும் ஆரோக்கியமும் கிடைக்கும்.”என அவர் கூறினார்.

மேலும் “மனச் சுத்தமே தியானத்தின் அடிப்படை. அமைதியான மனம், தெளிவான சிந்தனை, சிறந்த கவனிப்புத்திறன், உள்மன ஆற்றல், புத்துணர்ச்சி ஆகியவை தியானத்தின் இயல்பான விளைவுகள். இன்றைய வேகமான உலகில் ஆனந்தத்தையும் அமைதியையும் பெற தியானத்தின் சக்தியை நாம் உணர வேண்டும்.”

மனித வாழ்வின் துன்பங்களை நீக்க அறிஞர்கள் மற்றும் சிந்தனையாளர்கள் பல அறநெறி வழிகளை உருவாக்கியதாக அவர் குறிப்பிட்டார். அவைதான் இன்று யோகக் கலையாக உலகளவில் பின்பற்றப்பட்டு வருகின்றன என்றார்.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலைமாமணி சொல்வேந்தர் சுகி சிவம் கலந்துகொண்டு உரையாற்றினார். அவர் இந்துமத கருத்துக்களை மையமாகக் கொண்டு ‘இந்து தர்ம வித்தியா பீடம்’ அமைப்பை உருவாக்கி வாழ்வியல் கலைப்பயிற்சிகளை நடத்தி வருகிறார் என்றும், அவரின் பங்களிப்பு மக்களுக்கு சிந்தனை விருந்தாகும் என்றும் ஆளுநர் பாராட்டினார்.

(லோஜன் விஜயகுமார்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here