“எந்த கொம்பனாக இருந்தாலும், உலகின் எந்த மூலையிலும் பதுங்கி இருந்தாலும் தவறிழைத்தவர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது. பாதாள குழுக்கள் மற்றும் போதைப்பொருள் மாபியாக்களுக்கு முடிவு கட்டப்பட்டுவருகிறது,” என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (15) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர், அரசாங்கம் சட்ட ஒழுங்கை நிலைநிறுத்த கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.
“பாதாள குழுக்கள் மற்றும் போதைப்பொருள் வியாபாரிகளுக்கு முடிவு கட்டுவோம் என்று உறுதியளித்திருந்தோம். அதற்காக பாதுகாப்பு துறையினருக்கு தேவையான வளங்கள் வழங்கப்பட்டுள்ளன. அவர்கள் தங்கள் கடமைகளை சிறப்பாக நிறைவேற்றி வருகின்றனர்.
போதைப் பொருள் கடத்தல் மன்னர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். நீதிமன்றத்துக்குள் துப்பாக்கிச்சூடு நடத்தி தப்பியவர்கள் கூட நேபாளத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கு முன்பு இவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை,” என்றார் அமைச்சர்.
அவர் மேலும் கூறியதாவது,
“முன்னர் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் இடம்பெற்றபோது, அரசாங்கம் இதை கட்டுப்படுத்த முடியாது என எதிரணிகள் கூறின. ஆனால் இன்று எந்த குற்றவாளியும் சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது என்பதற்கு உறுதியான நிரூபணம் கிடைத்துள்ளது.
கடந்த காலங்களில் குற்றவாளிகள் அரசியல்வாதிகளால் பாதுகாக்கப்பட்டனர்; ஆனால் எமது ஆட்சியில் அதற்கு இடமில்லை. மக்களின் சொத்துகளை களவாடியவர்கள், சூறையாடியவர்கள் சட்டத்தின் பிடியில் சிக்குவார்கள். மத்திய வங்கி பிணைமுறி மோசடியில் தொடர்புடைய அர்ஜுன் மகேந்திரனுக்கும் சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும்,” என்று அமைச்சர் இரா. சந்திரசேகர் உறுதியளித்தார்.








