புதிய அரசாங்கம் மீள ஒப்படைக்கப்பட்டுள்ள அரச வாகனங்களை ஏலத்தில் வைத்து, அதனை காட்சிப் பொருளாக மாற்றி பொதுமக்களை ஏமாற்றுவதை விடுத்து, திறைசேரிக்கு பணத்தை பயன்படுத்துமாறு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பில் ஜனாதிபதி செயலகத்திற்கு அண்மித்த பொது வாகன தரிப்பிடத்தில் வைக்கப்பட்டுள்ள டஜன் கணக்கான அரச வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளமை தொடர்பில் ஊடகவியலாளர்கள் வினவிய போதே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
“வாகனங்களைக் காண்பிப்பதன் மூலம் அவர்கள் ஒரு சிறிய மகிழ்ச்சியைப் பெறுகிறார்கள் என்று நான் நினைக்கிறேன். 2015 ஆம் ஆண்டு ஜோன் அமரதுங்கவும் இதேபோன்ற வாகன கண்காட்சியை காலி முகத்திடலில் நடத்தினார். இந்த வாகனங்களை அமைச்சர்கள், எம்பிக்கள் பயன்படுத்தவில்லை. இந்த வாகனங்கள் ஜனாதிபதி அலுவலகத்தில் உள்ளவர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகளால் பயன்படுத்தப்பட்டுள்ளன” என்றார்.
தயாசிறி ஜயசேகர மேலும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிடம் வாகனங்களை ஏலம் விட்டு அந்த பணத்தை திறைசேரியில் வைப்பிலிடுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் முச்சக்கர வண்டிகளை பயன்படுத்தி உத்தியோகபூர்வ பணிகளை மேற்கொள்ளுமாறு அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை வழங்குமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.








