முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் இராசையா பார்த்திபன் என்ற திலீபனின் சிலை, யாழ்ப்பாணம் நல்லூரில் உள்ள திலீபன் நினைவு சதுக்கத்தில் இருந்து, உரிய பகுதி நீதிமன்றத்திற்கு உண்மைகள் அறிவிக்கப்பட்ட பின்னர் அகற்றப்பட்டதாக அரசாங்க பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் பேசிய அமைச்சர் ஜயதிஸ்ஸ, பொலிஸார் நீதிமன்றத்தில் உண்மைகளை அறிவித்ததாகவும், சிலை தொடர்பான வழக்கு விசாரணையில் இருப்பதாகவும் கூறினார்.
திலீபனின் நினைவு தினத்தை முன்னிட்டு வடக்கில் செப்டம்பர் மாதத்தில் ஒவ்வொரு ஆண்டும் அவரது படத்தை வைத்து நினைவு நிகழ்வுகள் நடத்தப்பட்டு வந்ததாகவும், ஆனால் முதல் முறையாக இந்த ஆண்டு சிலை வைக்கப்பட்டதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
“இந்த ஆண்டு ஒரு சிலை வைக்கப்பட்ட நிலையில் அது பொலிஸாரால் அகற்றப்பட்டது.தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்ட குழு ஆகும். தடை செய்யப்பட்ட அமைப்பை ஊக்குவிப்பதை, அவர்களின் கொடிகள், சின்னம் போன்றவை உட்பட, நமது நாட்டின் சட்டங்கள் அனுமதிக்கவில்லை. இத்தகைய நடவடிக்கைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். சிலையை அகற்றுவதற்கு முன்பு, பொலிஸார் நீதிமன்றத்தில் உண்மைகளை முன்வைத்தனர். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது,” என்று அவர் விளக்கினார்.
நாட்டில் இன பதற்றத்தை ஏற்படுத்த அவ்வப்போது முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், ஆனால் அரசாங்கம் இத்தகைய நடவடிக்கைகளை சகித்துக் கொள்ளாது என்றும் சட்ட நடவடிக்கை எடுக்கும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
திலீபனின் 39வது நினைவு தின நிகழ்வுகள் அந்த இடத்தில் நிறைவடைந்து ஒரு நாள் கடந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை (27) பொலிஸாரால் சிலை அகற்றப்பட்டதை அடுத்து அவரது கருத்துக்கள் வெளியாகி உள்ளன.
திலீபன் 1987 செப்டம்பரில் இந்திய அரசாங்கத்திடம் பல கோரிக்கைகளை முன்வைத்து நல்லூரில் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டதைத் தொடர்ந்து உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.








