புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மஹரகம தம்பஹேன வீதியைச் சேர்ந்த சமிந்து டில்ஷான் பியுமங்க கந்தானராச்சி என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
இன்று நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்தார்.
சந்தேக நபர் பயணித்த வேன் சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும், சந்தேகத்திற்குரிய மற்றைய பெண் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் ஆனந்த விஜேபால கூறினார்.
தற்போது தேசியப் பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று அமைச்சர் சபையில் சுட்டிக்காட்டினார்.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களிடையே நடைபெற்று வரும் நீண்டகால மோதல்களே இவை எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், குற்றச் செயல்கள் இடம்பெற்ற உடனேயே தனியான விசாரணைகள் நடத்தப்படுவதாகவும், தேசியப் பாதுகாப்புக்கு இடையூறாக இந்த சம்பவத்தைக் கருத வேண்டிய அவசியமில்லை என்றும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.








