துறைமுகத்திலிருந்து சுங்கப் பரிசோதனைகள் எதுவுமின்றி விடுவிக்கப்பட்ட 325 கொள்கலன்களும் அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட ஆளுநர் ஒருவருக்குரியது என்றும் அந்தக் கொள்கலன்களில் சட்டவிரோத பொருட்கள் இருக்கின்றமையை அறிந்ததாலேயே அவற்றை சுங்க பரிசோதனைகளின்றி விடுவிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும், பரிசோதனைகளின்றி கொள்கலன்களை துறைமுகத்திலிருந்து விடுவிக்குமாறு அழுத்தம் கொடுப்பதற்கு அமைச்சர் ஒருவருக்கு அதிகாரம் இல்லை என்றும் இவ்வாறு பரிசோதனைகளின்றி கொள்கலன்கள் விடுவிக்கப்படுகின்றமை பாரதூரமான செயற்பாடென்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பில் நேற்று (29/1/2025) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஊழல் தொடர்பில் பேசி ஆட்சிக்கு வந்த இந்த வீண் அரசாங்கம் கடந்த காலங்களில் பரிசோதிக்கப்படாமல் சிவப்புப் பட்டியலிலிருந்த 320 வரையான கொள்கலன்களை எவ்வித பரிசோதனையுமின்றி சுங்கத்திலிருந்து விடுவிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

எங்களுக்கு கிடைத்துள்ள தகவல்களுக்கமைய, இந்த அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட ஒரு மாகாணத்தின் ஆளுநருக்கு சொந்தமான கொள்கலன்களே இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளன. இந்த கொள்கலன்களில் இருந்தவை என்ன, போதைப்பொருட்களா அல்லது வேறேதும் பொருட்களா?

இது மிகவும் பாரதூரமான பிரச்சினையாகும். கடந்த அரசாங்கங்களின் தவறுகளை பற்றி பேசிவிட்டு, சலுகைகளைப் பற்றி பேசி வைராக்கியத்தை உருவாக்கி ஆட்சிக்கு வந்த தரப்பினர் எந்தவொரு பரிசோதனையுமின்றி 320 வரையான கொள்கலன்களை விடுவிக்க அமைச்சர்கள் சுங்கத்துக்கு உத்தரவிடுகிறார்கள் என்றால் அது பாரதூரமான பிரச்சினையாகும். இதுவும் மத்தியவங்கி நிதி மோசடியை போன்று பாரதூரமான விடயமாகும்.

ஏதிர்க்கட்சியிலுள்ளவர்கள் கூட இதிலுள்ள பாரதூரத் தன்மையை அறிந்து இந்தப் பிரச்சினையில் தலையிடவில்லை. இந்த கொள்கலன்களில் என்ன இருந்தது என்பது கடவுளுக்கே தெரியும். எனவே, இந்த விவகாரம் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டியது அவசியமாகும்.

பரிசோதனைகளின்றி கொள்கலன்களை சுங்கத்திலிருந்து விடுவிக்க அமைச்சருக்கு அதிகாரம் இல்லை. சட்டத்தை இவ்வாறு பயன்படுத்துவது தவறில்லை. அரசியல் நட்பு வட்டாரங்களின் கொள்கலன்களை பரிசோதனைகளிலிருந்து விடுவிக்க அமைச்சர்களுக்கு உரிமை இல்லை. இந்தக் கொள்கலன்களில் சட்டவிரோத பொருட்கள் இல்லை என்றால் ஏன் பரிசோதனைகளின்றி வெளியிட்டார்கள். அவற்றில் சட்டவிரோத பொருட்கள் இருப்பதை அறிந்து வைத்திருந்ததாலேயே இந்த கொள்கலன்களை விடுவித்தார்கள் என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here