ஜனாதிபதி தேர்தலில் தெரிவாகும் புதிய ஜனாதிபதி இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்துக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டியது அவசியம் என்று தேசிய சமாதானப் பேரவை வலியுறுத்தியிருக்கிறது.

சமாதானப் பேரவை நேற்றைய தினம் (17.09) வெளியிட்ட அறிக்கையின் விபரம் வருமாறு,

ஜனாதிபதி தேர்தல் பிரசாரங்கள் முடிவுக்கு வந்துள்ள நிலையில், தேர்தல் முடிவு நிச்சயமற்றதாக இருக்கின்ற அதேவேளை, பொருளாதார உறுதிப்பாடின்மையுடனும் ஆழமாக வேரூன்றிய ஊழல் மற்றும் தண்டனையின்மைக் கலாசாரத்துடனும் போராடிக்கொண்டிருக்கும் ஒரு நாட்டையே புதிய ஜனாதிபதி பொறுப்பேற்கப் போகிறார்.

நாட்டுக்கு நிலையான அமைதியையும் ஐக்கியத்தையும் கொண்டுவருவதற்கு இந்த பிரச்சினைக்கு புதிய ஜனாதிபதி முன்னுரிமை கொடுக்கவேண்டும்.

சுதந்திரத்துக்கு பின்னர் பல்லின சமுதாயம் ஒன்றை நேர்மையுடனும் சகல தரப்பினரையும் அரவணைக்கும் அணுகுமுறையுடனும் ஆட்சிசெய்யத் தவறியமையே பல தசாப்தகால போருக்கும் பயங்கரவாதத்துக்கும் வழிவகுத்தது.

இந்த நாடு எம்மெல்லோருக்கும் சொந்தம் என்று உரிமை கொண்டாடக்கூடியதாக ஒரு தேசிய உரித்து உணர்வை வளர்ப்பதற்கும் நம்பிக்கையை  மீளக் கட்டியெழுப்புவதற்கும்  சகல சமூகங்களினதும் அபிலாசைகளை ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு மெய்யான அரசியல் தீர்வு இன்றியமையாததாகும். எந்தவொரு அரசியல் தீர்விலும் மலையகத் தமிழ்ச் சமூகத்துக்கு உரிய இடம் அளிக்கப்படுவதை புதிய ஜனாதிபதி உறுதிசெய்யவேண்டும். சுதந்திரத்துக்கு பின்னரான ஏழு தசாப்த காலத்தில் உரியமுறையில் கவனிக்கப்படாத ஒரு சமூகமாக மலையக்த் தமிழர்கள் அவலங்களை அனுபவித்து வந்திருக்கிறார்கள்.

மூன்று முன்னணி வேட்பாளர்களும் வெவ்வேறு வழிகளில்  நாட்டுக்கு தலைமை தாங்கி வழிநடத்துவதில் தங்களுக்கு இருக்கும் ஆற்றலை  வெளிக்காட்டியிருக்கிறார்கள். ஆனால், நாட்டை முன்னோக்கி நகர்த்துவதற்கு அவர்கள் இனநெருக்கடியை பின்னரங்கத்துக்கு தள்ளிவிடாமல் அதை தீர்த்துவைப்பதற்கு தங்களை அர்ப்பணிக்க வேண்டும்.

தேர்தலில் எவர் வெற்றிபெற்று புதிய ஜனாதிபதியாக வந்தாலும், அவர் மாகாணசபைகளுக்கு அதிகாரமளிக்கும் ஒரு அதிகாரப்பகிர்வு ஏற்பாட்டை முன்னெடுப்பதன் மூலமும் சிறுபான்மைச் சமூகங்களுக்கு ஒப்புரவான பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்வதன் மூலமும் தலைமைத்துவத்தை வெளிக்காட்ட வேண்டும்.

அரசியல் உறுதிப்பாடும் இனங்களுக்கிடையிலான அமைதியும் இல்லாவிட்டால் அவசரமாகத் தேவைப்படுகின்ற வெளிநாட்டு முதலீட்டையும் சர்வதேச தோழமையையும் கவருவதற்கு நாடு தொடர்ந்து போராடிக்கொண்டே இருக்கவேண்டும்.

அதிகாரப் பரவலாக்கத்துக்கும்  பொறுப்புக்கூறலுக்கும்  சகல சமூகங்களையும் அரவணைக்கும் அணுகுமுறைக்கும் முன்னுரிமை கொடுக்கக்கூடிய ஒரு புதிய சமூக ஒப்பந்தத்தை  வகுப்பதற்கு புதிய ஜனாதிபதி அரசியல், இன மற்றும் வர்க்க வேறுபாடுகளுக்கு அப்பால் சிந்தித்து செயற்படவேண்டியது அவசியமாகும். அந்த எதிர்காலம்  நீதியையும் சமத்துவத்தையும் நிலையான சமாதானத்தையும் குறிப்பதாக இருக்கவேண்டும்.

நாட்டின் சவால்களுக்கான தீர்வு பொருளாதாரச் சீர்திருத்தங்களில் மாத்திரமல்ல, சகல குடிமக்களினதும் உரிமைகளையும் அபிலாசைகளையும் மதிக்கின்ற ஒரு அரசியல் கட்டமைப்பை கட்டியெழுப்புவதிலும் தங்கியிருக்கிறது.  அதிகாரப் பரவலாக்கத்தின் ஊடாக இனநெருக்கடிக்கு தீர்வைக் காண்பது என்பது வெறுமனே ஆட்சிமுறையைப் பற்றியதல்ல, பொருளாதார மீட்சியையும் பற்றியதாகும்.இதை நோக்கிய முயற்சியை இலங்கையின் சகல குடிமக்களும் சர்வதேச சமூகமும் நிச்சயம் ஆதரிக்கும்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here