முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் மகாவித்தியாலயத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (30.05.2025) தேனீக்கொட்டிற்கு இலக்காகி 78ற்கும் மேற்பட்ட மாணவர்களும், ஆசிரியர்கள் சிலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தேனீக் கொட்டிற்கு இலக்கான மாணவர்களின் நிலமைகளைப் பார்வையிட்டார்.
அத்தோடு பாடசாலை வளாகத்திலுள்ள தேனீக் கூடுகளை அகற்றாமல் அசமந்தமாகச் செயற்பட்டமைக்கு வனஜீவராசிகள் திணைக்களத்தினரை மிகக் கடுமையாக எச்சரித்ததுடன், பாடசாலை வளாகத்திலுள்ள தேனீக்கூடுகளை உடனடியாக அகற்றுமாறும் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில்,
முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் மகாவித்தியாலய பாடசாலைக் கட்டடத்தொகுதியிலிருந்த தேனீக்கூடு, தற்போது வீசிவரும் கடுமையான காற்றினால் உதிர்ந்து வீழ்ந்தமையினால், பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களைத் தாக்கியுள்ளது.
இதனால் பாடசாலையில் கற்றல் செயற்பாட்டில் ஈடுபட்டிருந்த 78ற்கும் மேற்பட்ட மாணவர்களும், ஆசிரியர்களும் பாதிக்கப்பட்டு ஒட்டுசுட்டான் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

அதில் 45 மாணவர்களும், சில ஆசிரியர்களும் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக மாற்றப்பட்டுள்ளனர்.
அதிலும் குறிப்பாக இரு மாணவர்களும், ஆசிரியர் ஒருவர் உட்பட மூவர் மிகமோசமாக தேனிக்கொட்டிற்கு உள்ளான நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் நிலை தேறியுள்ளதாகவும், எதுவித உயிர் பாதிப்புக்களும் இல்லை எனவும் வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக ஒட்டுசுட்டான் மாகாவித்தியாலய கட்டடங்களில் காணப்படும் தேனீக் கூடுகளை அகற்றுமாறு முல்லைத்தீவு மாவட்ட வன ஜீவராசிகள் திணைக்களத்திடம் ஏற்கனவே பாடசாலைச்சமூகம் கடந்த 02.09.2024 அன்று கடிதம் மூலம் கோரிக்கை விடுத்திருந்தும் குறித்த தேனீக்கூடுகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை என இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனிடம் பாடசாலைச்சமூகம் முறையிட்டிருந்தது.
இந்நிலையில் பாடசாலைச் மூகத்தினரிடமிருந்து கடிதத்தின் பிரதிகளைப்பெற்றுக்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர், பாடசாலை மாணவர்களின் உயிருடன் விளையாட வேண்டாமென வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தரை மிகக் கடுமையாக எச்சரித்தார்.
அந்தவகையில் ஒட்டுசுட்டான் மகாவித்தியாலய வளாகத்திலுள்ள தேனீக்கூடுகள் அகற்றப்படுமென வனஜீவராசிகள் திணைக்களத்தால் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களிடம் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

[கிளிநொச்சி நிருபர் – ஆனந்தன்]








