நாட்டின் யாழ்ப்பாணப் பகுதியில் உள்ள தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு தொடர்புடைய பிரச்சினைக்கு இன்னும் ஒரு இரண்டு வாரங்களுக்குள் சிறந்த தீர்வு முன்வைக்கப்படும் என்று சபை முதல்வரும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி, துறைமுகம் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சருமான பிமல் ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று 09 அக்டோபர் நடைபெற்ற விவாதத்தில், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், பலாலி விமான நிலைய அபிவிருத்திக்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
நீதி அமைச்சும் தையிட்டி திஸ்ஸ தொடர்பான நடவடிக்கைகள் எடுத்து அறிக்கை தயார் செய்துள்ளதாகவும், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்றவர்கள் குறிப்பிடுவதை போன்று இந்த விடயத்துக்கு தீர்வுக் காண நடவடிக்கை எடுத்தால் அது மத மோதல்களையே ஏற்படுத்தும்.
யாழ்.தையிட்டி திஸ்ஸ விகாரைக்குரிய சிறந்த தீர்வு ஓரிரு வாரங்களில் முன்வைக்கப்படும். எமக்கு எதிராக பேசும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிடும் ஒவ்வொரு பிரச்சினைகளுக்கும் தீர்வு பெற்றுக்கொடுத்து வருகிறோம்.
சுவிட்ஸர்லாந்தின் பெடரல் பற்றி பேசிப் பயனில்லை. சகல பிரச்சினைகளுக்கும் இங்கிருந்தவாறு தான் பேச்சுவார்த்தை ஊடாக தீர்வு காண வேண்டும். அதனை மறந்து விடக்கூடாது என்றார்.








