நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் உள்ளடக்கிய சுனாமி தயார்நிலை ஒத்திகை நவம்பர் 5ஆம் திகதி நடைபெறவுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட தெரிவித்துள்ளார்.
கடந்த ஒரு மாதத்தில் சுமாத்ரா தீவை அண்மித்த பகுதிகளில் பல சிறிய பூகம்பங்கள் பதிவாகியிருப்பதாகவும், இதனை முன்னிட்டு நாட்டின் தயார்நிலையை சோதிக்க இந்த ஒத்திகை நடத்தப்படுவதாகவும் அவர் கூறினார்.
இந்த ஒத்திகை, இந்தியப் பெருங்கடல் சுனாமி எச்சரிக்கை முறைமையின் கீழ் உள்ள 28 நாடுகள் இணைந்து நடத்தும் பிராந்திய பயிற்சியின் ஓர் பகுதியாகும்.
களுத்துறை, மாத்தறை, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு ஆகிய நான்கு முக்கிய கடலோர மாவட்டங்கள் மையமாகக் கொண்டு, மற்ற மாவட்டங்களும் இதில் பங்கேற்கவுள்ளன.
மேலும், ரிக்டர் அளவில் 6.5 ஐத் தாண்டும் பூகம்பம் சுமாத்ரா அருகே ஏற்பட்டால், இலங்கையில் சுனாமி அபாயம் உருவாகக்கூடியதால், அதற்கான தயார்நிலை மிக அவசியம் என மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட வலியுறுத்தினார்.








