வடக்கு, வடமத்திய, மத்திய , சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார்.
மத்திய மலைப் பிராந்தியத்தின் மேற்கு சரிவுகளிலும், மத்திய, சப்ரகமுவ, மேல், தென், வடமத்திய, வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு சுமார் 50 – 60 km வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக் கூடும்.
பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் அவதானத்துடன் செயற்படுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு மற்றும் தென்மேற்குப் பகுதிகளுக்கு மேலாக இணைந்து காணப்படுகின்ற சக்தி மிக்க தாழ் அமுக்கமானது மேற்கு – வடமேற்குத் திசையினூடாக நகர்ந்து தீவிரமடைந்து நேற்று இரவு 11.30 மணியளவில் சூறாவளியாக வலுவடைந்துள்ளது. இதற்கு “மொன்தா” என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த “மொன்தா” சூறாவளியானது முல்லைத்தீவுக்கு வடகிழக்குத் திசையில் சுமார் 610 km தொலைவில் வங்காள விரிகுடாவின் தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு பகுதிகளுக்கு மேலாக காணப்படுகின்றது.
“மொன்தா” சூறாவளியானது வடக்கு – வடமேற்குத் திசையினூடாக நகர்வதுடன் மேலும் தீவிரமடைந்து நாளை காலையளவில் மிகப் பலம் வாய்ந்த சூறாவளியாக வலுவடையக்கூடும்.
இதன் பிற்பாடு நாளை மாலை அல்லது இரவு வேளையில் ஒரு மிகப் பலம் வாய்ந்த சூறாவளியாக ஆந்திரப் பிரதேசத்தின் கரையை ஊடறுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காங்கேசன்துறை தொடக்கம் திருகோணமலை ஊடாக மட்டக்களப்பு வரையான கடல் பிராந்தியங்களுக்கு செல்லும் மீனவர்களும் கடல்சார் ஊழியர்களும் மறு அறிவித்தல் வரையில் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்படுகின்றனர்.
காலி தொடக்கம் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களுக்கு செல்லும் மீனவர்களும் கடல்சார் ஊழியர்களும் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 – 60 km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக் கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பாக காணப்படும்.







