சர்ச்சைக்குரிய க்ரிஷ் (Krish) ஒப்பந்தத்தில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு 70 மில்லியன் ரூபா இலஞ்சம் கொடுத்த குற்றச்சாட்டு தொடர்பாக இலஞ்ச ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட க்ரிஷ் நிறுவனத்தின் முன்னாள் இயக்குனர் ஜானகி சிறிவர்தன எதிர்வரும் அக்டோபர் 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபரை நேற்று (24) பிற்பகல் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தியதன் பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான கொழும்பு கோட்டை டிரான்ஸ்வேர்க் சதுக்கம் என்ற காணியை Krrish Transworks Colombo (pvt) Ltd நிறுவனத்திற்கு விரைவாக பெற்றுக்கொள்வதற்காக நாமல் ராஜபக்ச எம்.பிக்கு 70 மில்லியன் ரூபா பணத்தை இலஞ்சமாக வழங்கியது தொடர்பில் நடத்தப்படும் விசாரணைக்காக வாக்குமூலம் பெறுவதற்காக அந்த நிறுவனத்தின் முன்னாள் இயக்குனரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ஜானகி டி சொய்சா சிறிவர்தன நேற்று காலை இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தார்.

அங்கு அவர் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டு பின் கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அங்கு சந்தேக நபரை கைது செய்தது தொடர்பாக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் உதவி சட்டப் பணிப்பாளர் சட்டத்தரணி அமர விஜேசிங்க கருத்துக்களை முன்வைத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here