இந்த வருடத்திற்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நாளை (09) நாடு முழுவதும் உள்ள 2,723 பரீட்சை நிலையங்களில் நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.

இவ்வருடம் மொத்தம் 294,089 பரீட்ச்சார்த்திகள் பரீட்சைக்கு தோற்றுகின்றனர். இவர்களில் சிங்கள மொழி மூலம் 220,366 பேரும், தமிழ் மொழி மூலம் 73,723 பேரும் பதிவு செய்துள்ளனர்.

பரீட்சை தொடர்பான வகுப்புகள் ஓகஸ்ட் 5 நள்ளிரவுடன் நிறைவடைந்ததாகவும், பரீட்சை முடியும் வரை அச்சு அல்லது மின்னணு ஊடகங்கள் மூலம் புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான விளம்பர நடவடிக்கைகளில் ஈடுபடுவது கண்டிப்பாக தடை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் பெற்றோர்கள் பரீட்சை நிலையங்களுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மாணவர்கள் மனதை ஒருநிலைப்படுத்தி இலகுவாக பரீட்சை எழுதுவதற்கு உதவும் வகையில், பரீட்சை ஆரம்பமாக ஒரு மணி நேரத்திற்கு முன்னர் அந்த பரீட்சை நிலையங்களுக்கு வருமாறு பரீட்சைகள் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

பரீட்சை நேர அட்டவணை:

-வினாத்தாள் II: காலை 9:30 மணி முதல் 10:45 மணி வரை

– சிறிய இடைவேளைக்குப் பின்னர்

-வினாத்தாள் I: காலை 11:15 மணி முதல் 12:15 மணி வரை

பரீட்சைக்கு தோற்றும் அனைத்து பரீட்சார்த்திகளும் வினாத்தாளில் உள்ள வழிமுறைகளை கவனமாக வாசித்து, தங்கள் சுட்டெண்ணை சரியாக எழுதி, பதில்களை வினாத்தாளிலேயே தெளிவான கையெழுத்தில் எழுத வேண்டும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.

மேலும், பரீட்சை மண்டபத்திற்குள் கையடக்க தொலைபேசிகள், ஸ்மார்ட் கடிகாரங்கள், குறிப்புகள் அல்லது வேறு எந்த மின்னணு சாதனங்களையும் கொண்டு வருவது கண்டிப்பாக தடை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here