ஈரானுடனான மோதலை முடிவுக்கு கொண்டுவருவதில் சாதகமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, நிலைமை மாறினால் இராணுவ நடவடிக்கை எடுக்க அமெரிக்கப் படைகள் தயாராக இருப்பதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.
கட்டார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல் ரஹ்மான் அல் தானியுடன் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, ட்ரூத் சோஷல் தளத்தில் வெளியிட்ட அறிக்கையில், ஈரான் தொடர்பான விடயங்கள் குறித்து அதிகளவில் கவனம் செலுத்தப்பட்டதாக ட்ரம்ப் கூறியுள்ளார்.
ஈரானுக்கு எதிரான தற்போதைய அமெரிக்க கடற்படை முற்றுகையை தொடர்வதற்கும், தரை வழித்தடங்களை இலக்கு வைத்து புதிதாக அறிவிக்கப்பட்ட ‘ ஒபரேஷன் அயர்ன் கேட்’ நடவடிக்கைக்கும் கட்டார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன், குவைத் மற்றும் ஏனைய பிராந்திய நாடுகள் ஆதரவளிப்பதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரான் அணு ஆயுதங்களைப் பெற அனுமதிக்கக் கூடாது என்ற பொதுவான நிலைப்பாட்டை அந்த நாடுகள் கொண்டுள்ளதாகவும், அந்த கோரிக்கை பேச்சுவார்த்தைக்கு உட்பட்டது அல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.
மத்திய கிழக்கில் ஏற்படும் மாற்றங்கள் தேவைப்பட்டால், இராணுவ ரீதியாக பதிலளிக்க வொஷிங்டன் தயாராக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.
எனினும், தற்போதைய சூழ்நிலையில் புதிய இராணுவ நடவடிக்கை ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவாகவே காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இஸ்ரேல் மற்றும் ஏனைய மத்திய கிழக்கு நாடுகள் ஈரானிய அச்சுறுத்தல்களில் இருந்து பாதுகாக்கப்படுவதாக நம்பிக்கை தெரிவித்த ட்ரம்ப், மோதலை முடிவுக்கு கொண்டுவருவதற்கான முயற்சிகள் முன்னேறி வருவதாகவும் கூறியுள்ளார்.
இந்த செயன்முறை முழுவதும் அமெரிக்கா தனது தேசிய நலன்களை தொடர்ந்து பாதுகாக்கும் என்றும், இராணுவ நடவடிக்கை முடிவுக்கு வருவது அமெரிக்கர்கள் மற்றும் சர்வதேச சமூகத்தின் பாதுகாப்பை மேம்படுத்தும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.








