நாட்டின் சில பகுதிகளில் இன்று 75 மி.மீற்றருக்கும் அதிகமான கனமான மழை பெய்யும் எனவும் பல மாகாணங்களில் பலத்த காற்று வீசும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் கணித்துள்ளது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும். இந்த பகுதிகளில் மேகமூட்டமான நிலை நிலவும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
சப்ரகமுவ மாகாணத்திலும், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ ஐ விட அதிகமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
வடமேல் மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும்.
வட மத்திய, சப்ரகமுவ, தென், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படும் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் காரணமாக ஏற்படும் சேதங்களுக்கு எதிராக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், சிலாபம் முதல் கொழும்பு மற்றும் காலி வழியாக மாத்தறை வரையிலான கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காற்று மேற்கு முதல் தென்மேற்கு திசையில் மணிக்கு 30-40 கி.மீ வேகத்தில் வீசும். சிலாபம் முதல் கல்பிட்டிய வழியாக மன்னார் வரையிலும், மாத்தறை முதல் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலான கடற்பரப்புகளில் அவ்வப்போது மணிக்கு 60-70 கி.மீ வரை அதிகரிக்கும்.
இந்த கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகவோ அல்லது மிகவும் கொந்தளிப்பாகவோ காணப்படும். எனவே அடுத்த அறிவித்தல் வரை கடற்படை மற்றும் மீனவ சமூகத்தினர் அந்த கடற்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
திருகோணமலை மற்றும் காங்கேசன்துறை வழியாக மட்டக்களப்பு முதல் மன்னார் வரையிலும், கொழும்பு மற்றும் காலி வழியாக சிலாபம் முதல் மாத்தறை வரையிலான கடற்பரப்புகளும் அவ்வப்போது கொந்தளிப்பாக காணப்படும். அங்கு காற்றின் வேகம் மணிக்கு 50-60 கி.மீ ஆக இருக்கும்.
கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை வழியாக புத்தளம் முதல் பொத்துவில் வரையிலான கடற்பரப்புகளில் அலை உயரம் 2.5-3.0 மீட்டர் வரை அதிகரிக்கலாம்.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த சூறாவளி காற்றும் மிகவும் கொந்தளிப்பான கடலும் காணப்படலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.







