நுகர்வோர் செலுத்தும் பணத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட எடையில் பாண் கிடைக்கிறதா என்பதை உறுதி செய்யும் நோக்கில், நுகர்வோர் விவகார அதிகார சபையால் நாடு முழுவதும் விசேட சோதனை நடத்தப்பட்டது.
இதன்போது குறைவான எடை கொண்ட பாண்கள் மற்றும் பல்வேறு முறைகேடுகள் கண்டறியப்பட்டுள்ளன.
இந்த நடவடிக்கையின் கீழ் நாடு முழுவதும் சில்லறை கடைகள் மற்றும் பேக்கரிகள் உட்பட 118 நிறுவனங்கள் சோதனை செய்யப்பட்டன. இதன்போது பாண் ஒன்றுக்கு நிர்ணயிக்கப்பட்ட எடை உள்ளதா, எடை மற்றும் விலை முறையாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளதா என்பது குறித்து கடுமையாக பரிசோதிக்கப்பட்டது.
இதன்போது கடைகள் மற்றும் பேக்கரிகள் உட்பட 54 நிறுவனங்களில் குறைவான எடை கொண்ட பாண்கள் காணப்பட்டன.
அத்துடன், 76 கடைகள் மற்றும் பேக்கரிகளில் பாணின் எடை முறையாக காட்சிப்படுத்தப்படவில்லை என்றும், 65 நிறுவனங்களில் பாணின் விலை முறையாக காட்சிப்படுத்தப்படவில்லை என்றும் தெரியவந்துள்ளது.
சில்லறை கடையில் குறைவான எடை கொண்ட பாண்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அந்த நிறுவனத்துடன் தொடர்புடைய விநியோக சங்கிலியை விசாரித்து 81 பேக்கரிகள் சோதனை செய்யப்பட்டன.
இதற்கமைய, தொடர்புடைய பேக்கரிகளின் உற்பத்தி செயல்முறை மற்றும் அவற்றிலிருந்து ஏனைய கடைகளுக்கு பாண் விநியோகிக்கும் முறை ஆகியவை சரிபார்க்கப்பட்டன.
குறைவான எடை கொண்ட பாண் உற்பத்தி செய்யப்படுவது உறுதியான இடங்களில், நிர்ணயிக்கப்பட்ட எடையில் தயாரிக்கப்பட்டவற்றை மட்டுமே சந்தைக்கு வெளியிடுமாறு பேக்கரி உரிமையாளர்களுக்கு கடும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
முழு ராத்தல் பாண் – 450 கிராம் , அரை ராத்தல் பாண் 225 கிராம் எடையில் இருக்க வேண்டும் என நுகர்வோர் விவகார அதிகார சபை தீர்மானித்துள்ளது.
எனவே பாணின் எடை, விலை அல்லது வேறு ஏதேனும் வர்த்தக முறைகேடு தொடர்பில் முறைப்பாடு இருப்பின் அலுவலக நேரங்களில் 1977 என்ற எண் மூலம் தெரிவிக்குமாறு நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.








