பண்டிகைக் காலத்தில் விற்பனை செய்யப்படும் உணவு பொருட்கள் தொடர்பில் பொது சுகாதார ஆய்வாளர்கள் நடத்திய சோதனைகளில், விதிமீறல்களில் ஈடுபட்டவர்கள் மீது 817 சட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பொது சுகாதார ஆய்வாளர்கள் நாடு தழுவிய அளவில் 967 உணவுப் பாதுகாப்பு சோதனைகளை நடத்தியுள்ள நிலையில் இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பண்டிகைக் காலத்தில் நாடு முழுவதும் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில்,ஏப்ரல் 1-ஆம் திகதி தொடங்கப்பட்ட இந்த விசேட ஆய்வுத் திட்டம், 2,300 பொது சுகாதார ஆய்வாளர்கள் கொண்ட குழுவால் நடத்தப்படுகிறது.
பண்டிகைக் காலம் முடியும் வரை இந்த ஆய்வுகள் தொடரும் என அதன் சங்கம் தெரிவித்துள்ளது.
பொது சுகாதார ஆய்வாளர்கள் ஏப்ரல் 11-ஆம் திகதி வரையில், மொத்தம் 11,604 உணவு தொடர்பான நிறுவனங்களை ஆய்வு மேற்கொண்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைகளின் போது, 3,045 உணவுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டதோடு 2,299 பொருட்கள் நுகர்வுக்குத் தகுதியற்றவை எனக் கருதி அழிக்கப்பட்டதாக ஆய்வாளர்களினால் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.







