நியூசிலாந்தை தாக்கிய வையானு புயல் பிரதான நிலப்பரப்பிலிருந்து விலகிச் செல்லத் தொடங்கியுள்ளது எனவும் நாடு மீட்பு மற்றும் தூய்மைப்படுத்தும் கட்டத்திற்கு நகர்ந்துள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
நியூசிலாந்தின் வடக்கு தீவை நேற்றையதினம் (12) வையானு புயல் தாக்கிய நிலையில் மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியதோடு 10 cm அளவு மழை பெய்தது.
இதனால் வார்க்வொர்த் நகரில் உள்ள மௌராகி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்ததோடு அந்த பகுதியில் உள்ள வீடுகள் வீதிகள் மற்றும் குடியிருப்பு பகுதிக்குள் வெள்ளம் புகுந்துள்ளது.
இதேநேரம் புயலின் உச்சக்கட்டத்தின் போது, 11 மீட்டர் உயரம் வரை உயர்ந்த பிரம்மாண்டமான கடல் அலைகள் பதிவாகியுள்ளன.
இந்த அனர்த்தத்தில் சிக்கி சுமார் 5 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாகவும் 11 வரையில் காணாமல் இருப்பதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது வடக்குத் தீவில் புயலின் மிக மோசமான பாதிப்பு கடந்துவிட்ட போதிலும், அதன் பாதிப்பு சாத்தம் தீவுகளை நோக்கி நகர்கின்றன என அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
நிலைமைகள் சீரடைந்து வருவதால், டாரங்கா மற்றும் பே ஆஃப் பிளென்டியின் சில பகுதிகள் உட்பட பெரும்பாலான உள்ளூர் அவசரகால நிலைகள் நீக்கப்பட்டுள்ளன.
அத்துடன் இன்று திங்கட்கிழமை நிலவரப்படி, மத்திய வடக்குத் தீவில் சுமார் 3,000 வீடுகளில் மின்சாரம் இல்லாமல் இருப்பதாகவும் மின்சாரத்தை மீட்டெடுக்க மீட்புக் குழுவினர் பணியாற்றி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கட்டாயமாக வெளியேற்றப்பட்ட ‘பே ஆஃப் பிளென்டி’ எனும் பகுதியை சேர்ந்த மக்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப அனுமதிக்கப்பட்டனர். ஹாக்ஸ் பேயில் வசிப்பவர்கள், எப்போது திரும்புவது பாதுகாப்பானது என்பது குறித்த அறிவிப்புகளை இன்று பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த அனர்த்தம் காரணமாக ஏர் நியூசிலாந்து நிறுவனம் முன்னதாக 90 பிராந்திய விமானங்களை ரத்து செய்தது, எவ்வாறாயினும், உள்நாட்டு ஜெட் மற்றும் சர்வதேச சேவைகள் தற்போது இயங்கி வருகின்றன.







