பங்களாதேஷில் எரிபொருள் விலை 10% முதல் 15% வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் எரிசக்தி அமைச்சு நேற்று (சனிக்கிழமை) அறிவித்துள்ளது.
உலகளாவிய மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்ட அதிகரிப்பு மற்றும் மத்திய கிழக்கு மோதல் காரணமாக ஏற்பட்ட விநியோகப் பாதிப்பு என்பவையே விலை அதிகரிப்புக்கு காரணம் என அவ் அமைச்சு தெரிவித்துள்ளது.
புதிய விலைகளின்படி, பெட்ரோல் ஒரு லிட்டருக்கு 116 டாக்காவிலிருந்து 135 டாக்கா ($1.10) ஆகவும் (இலங்கை ரூபாவில் 347.15/=) , டீசல் 115 டாக்காவாகவும், மண்ணெண்ணெய் 130 டாக்காவாகவும் விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகரித்த சரக்கு மற்றும் காப்பீட்டுச் செலவுகள், இறக்குமதிச் செலவுகளை அதிகரித்ததால், இந்த விலை அதிகரிப்பு தவிர்க்க முடியாததாகியுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பங்களாதேஷ், இறக்குமதி செய்யப்படும் எரிபொருளை நம்பியிருப்பதால் அதிகரித்து வரும் எரிபொருள் செலவு, அந்நாட்டில் நெருக்கடியில் உள்ள அந்நியச் செலாவணிக் கையிருப்புக்கு மேலும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரசாங்கம் ஆரம்பத்தில் மானியங்கள், விலை அதிகரிப்பைத் தாமதப்படுத்துதல், கடுமையான இருப்பு கட்டுப்பாடுகள் மற்றும் விநியோகத்தைப் பன்முகப்படுத்தும் முயற்சிகள் மூலம் நுகர்வோருக்கு ஆதரவளிக்க முயன்றது, எனினும் உலகளாவிய விலைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் அந்த நடவடிக்கைகளைத் தக்கவைத்துக் கொள்வது மிகவும் கடினமாகியுள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும் எரிபொருள் பற்றாக்குறையால் எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் நீண்ட வரிசைகள் ஏற்பட்டுள்ளதோடு பீதியுடன் பொருட்களை கொள்வனவு செய்து பதுக்கி வைப்பதும் நிலைமையை மோசமாக்கியதாக அதிகாரிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதேநேரம் எரிபொருள் இறக்குமதியைப் மேற்கொள்வதற்காக அந்நாடு ஏற்கனவே 2 பில்லியன் டொலருக்கும் அதிகமான வெளிநாட்டு நிதியுதவியைக் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.








