கொழும்பு துறைமுகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள கொள்கலன் நெரிசலை நிவர்த்திப்பதற்கு உரிய நடவடிக்கை எடுப்படாவிடின் எதிர்வரும் வாரத்தில் கொள்கலன் தாங்கி ஊர்தி சாரதிகள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட நேரிடும் என கொள்கலன் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பல அரசியல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அந்த சங்கத்தின் தலைவர் சனத் மஞ்சுள இதனைக் குறிப்பிட்டார்.
பல வாரங்களாக கொழும்பு துறைமுகத்தில் நிலவிவரும் கொள்கலன் தாங்கி ஊர்தி நெரிசல் தொடர்பில் எமது செய்திச் சேவை தொடர்ந்தும் செய்திகளை வெளியிட்டு வருகின்ற போதிலும் அந்த பிரச்சினைக்கு இதுவரையில் தீர்வுகாணப்படவில்லை.
இந்தநிலையில், டிஜிட்டல் முறைமையை பின்பற்றினால் மாத்திரமே இந்த நெரிசலை குறைக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
துறைமுகத்தில் உள்வரும் மற்றும் வெளிச்செல்லும் வாகனங்கள் தொடர்பான தகவல்கள் வெள்ளை பலகை ஒன்றிலேயே குறித்து வைக்கப்படுகின்றன.
அத்துடன், துறைமுகத்தில் 6 தராசுகளே உள்ளன. இறக்குமதியாளர்களுக்கு அந்த தராசுகள் மீது நம்பிக்கை இல்லாதமையினால் தனியார் துறையினரிடமிருந்து உதவிகள் பெறப்படுகின்றன.
முதலில் இவை டிஜிட்டல் மயப்படுத்தப்பட வேண்டும். க்ளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ், நாட்டின் முக்கிய பொருளாதார மையங்களாக உள்ள துறைமுகம் மற்றும் சுங்கத்திலுள்ள பிரச்சினைகள் முதலில் தீர்க்கப்பட வேண்டும்.
இந்த பிரச்சினைக்கு உரிய தீர்வு வழங்கப்படாவிடின் கொள்கலன் சாரதிகள் அடுத்த வாரம் தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்வதற்கு திட்டமிட்டுள்ளதாக கொள்கலன் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சனத் மஞ்சுள தெரிவித்துள்ளார்.