பாகிஸ்தானில் இளைஞர் தொகை வேகமாக அதிகரித்து வரும் நிலையில் வேலையற்றோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், அந்நாட்டின் பொருளாதார நெருக்கடி மேலும் மோசமடையக் கூடும் என்றும் அந்நாட்டின் திட்டமிடல் ஆணைக்குழுவின் செனட் குழு எச்சரித்துள்ளது.
மந்தமான பொருளாதார வளர்ச்சி மற்றும் மக்கள் தொகை வேகமாக அதிகரிப்பது அந்நாட்டு இளைஞர்கள் இடையே மன அழுத்தம் அதிகரிப்பதற்கு காரணமாகக் கூடும் என்று பாகிஸ்தான் திட்டமிடல் ஆணைக்குழு அரசிடம் சுட்டிக்காட்டியுள்ளது.
பாகிஸ்தானின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி தற்போது 3.5 வீதம் என்பதோடு பேண்தகு பொருளாதார அபிவிருத்திக்கு 7 வீத உற் பத்தி வளர்ச்சி தேவை என்றும் அந்த ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
பாகிஸ்தானின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு வெளிநாட்டு முதலீடு, வலுசக்தித் துறையின் முன்னேற்றம் மற்றும் கைத்தொழில் அபிவிருத்தி முக்கிய காரணிகளாக குறிப்பிட்டு தனியார் துறையில் முதலீடு மற்றும் சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகத் துறையை மேம்படுத்துவதற்கு பல திட்டங்களும் திட்டமிடல் குழுவினால் அரசுக்கு முன்வைக்கப்பட்டுள்ளது.







