தனமல்வில பகுதியில், வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சிகரெட்டுகளை பாடசாலை மாணவர்களுக்கு விற்றதாகக் கூறி வர்த்தகர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
பல்வேறு சுவைகள் கொண்ட இந்த சிகரெட்டுகளை, குறித்த வர்த்தகர் ஒரு மாணவரிடம் கொடுத்து, அதனை ஒன்றுக்கு ரூ.100க்கு வழங்கியுள்ளார். பின்னர், மாணவர் அதையே பாடசாலையில் ரூ.200க்கு விற்பனை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
ஒரு மாணவர், இந்த சம்பவம் குறித்து அதிபரிடம் முறைப்பாடு செய்ததையடுத்து, சோதனை மேற்கொள்ளப்பட்ட போது, மாணவரிடமிருந்து இரண்டு வெளிநாட்டு சிகரெட்டுகள் மீட்கப்பட்டன.
தொடர்ந்து, தனமல்வில பொலிஸ் பரிசோதகரிடம் அளிக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில், வர்த்தக நிலையம் சோதனை செய்யப்பட்டது. அதில், சந்தேக நபரிடம் இருந்து 690 வெளிநாட்டு சிகரெட்டுகள், சிகரெட் விற்பனையால் ஈட்டிய ரூ. 360,000 பணம் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டன.
சந்தேக நபர் ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார் என பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.








