இலங்கையில் உள்நாட்டு போர் நிறைவடைந்ததிலிருந்து இன்று வரையில் நாட்டு மக்களுக்கு முழுமையான பாதுகாப்புக்கான உத்தரவாதம் ஒரு போதும் வழங்கப்படவில்லை.

மாறாக, பாதுகாப்பு வழங்குபவர்களை கண்டு தான் பொதுமக்கள் முதலில் அஞ்சுகிறார்கள். இந்த நிலை, காலங்காலமாகவே இருந்து வருகிறது. மக்களின் நலனுக்காக பாடுபடும் பாதுகாப்பு அதிகாரிகளுள் விரல் விட்டு எண்ணக்கூடியவர்கள் சிலரே உண்மையிலேயே மக்கள் நலனை கருத்திற் கொண்டு சேவை செய்கின்றனர்.

கல்வி, சுகாதாரம் என்பவை ஒரு நாட்டிற்கு எவ்வளவு முக்கியத்துவமானதாக பார்க்கப்படுகிறதோ அதை விட அதிகமாக பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

எனினும், நாட்டில் அண்மையில் நடக்கும் சம்பவங்கள் எதுவும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாக அமையவில்லை. பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகள் அதிகரித்துள்ளதுடன் போதைப்பொருள் பயன்பாடும் இன்னுமும் குறைவடைந்ததாக தெரியவில்லை.

இவ்வாறான சம்பங்களைத் தாண்டி பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய பாதுகாப்புத் துறையே அதில் கவனமின்றி நடந்துக்கொள்வதால் நடைபெறும் சம்பவங்கள் மக்களை கவலையயைடச் செய்வது மாத்திரமன்றி மக்கள் மத்தியில் மேலும் அச்சத்தை உருவாக்கியுள்ளது.

சில தினங்களுக்கு முன்னர், கொழும்பில் காணப்படும் பிராதான நகரங்களில் ஒன்றான மருதானை பொலிஸ் நிலையத்தில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பேசு பொருளாக மாறியுள்ளது. குறித்த சந்தேகநபர் தமிழ் பெண் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு, தற்கொலை தான் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனினும், இந்த மரணத்தில் சந்தேகங்கள் இருப்பதாக நாடாளுமன்றத்திலும் குரல்கள் எதிரொலித்தன.

கிளிநொச்சி பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய பொன்னையா கலாதர்ஷனி எனும் இரு பிள்ளைகளின் தாயார் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

பொலிஸார் 21ஆம் திகதி இரவு 8.45க்கு மருதானை பிரதேசத்தில் வைத்து குறித்த பெண்ணை கைது செய்துள்ளனர்.

இந்நிலையிலேயே, குறித்த பெண் 22ஆம் திகதி அதிகாலை 4 மணியளவில் விளக்கமறியலில் தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

குறித்த பெண் தான் அணிந்திருந்த நீண்ட காற்சட்டையை தூக்கிலிட பயன்படுத்தியுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு உறுதிப்படுத்தியிருந்தது.

இதனை ஒரு செய்தியாக மாத்திரம் தட்டி சென்று விட முடியாது, இதற்கு முன்னரும் கூட இது போன்று பொலிஸ் பாதுகாப்பில் இருக்கும் போது உயிரிழந்த பல சம்பவங்கள் பதிவாகியிருந்ததை நாம் கடந்து வந்திருந்தாலும் அவற்றை மறைக்க முடியாது.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்படுபவர்கள் உயிரிழந்த சம்பவங்கள் இலங்கை பொலிஸ் வரலாற்றில் புதிதல்ல.

பத்தோடு பதினொன்றாக இந்த சம்பவத்தையும் நாம் கடந்து விட முடியாது. காரணம் இதன் பின்னணியில் பல விடயங்கள் ஆழமாக காணப்படுவதே ஆகும்.

மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் அடிப்படையாக உரிமைகள் காணப்படுகின்றன. நாம் ஒவ்வொருவரும் இந்த உரிமைக்கு மாறாக செயற்பட்டால் மாத்திரமே அது குற்றமாகும். நாம் தண்டிக்கப்படுகிறோம். என்பது அடிப்படையான ஒரு விடயம்.

இந்த சம்பவத்தில் பல இடங்களில் தனி மனித உரிமை மீறப்பட்டுள்ளது என்பது தெளிவாக தெரியவருகிறது.

இது தொடர்பில் சிரேஷ்ட சட்டத்தரணி நடராஜர் காண்டீபனிடம் கருத்துக்களை கேட்டறிந்தது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், இந்த மரணத்திற்கான முழு பொறுப்பையும் மருதானை பொலிஸார் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் பொலிஸார் சட்டத்தை கையில் எடுக்க கூடாது எனவும் வலியுறுத்தினார்.

சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டால் சந்தேகநபருக்கான முழு பொறுப்பும் பொலிஸாரே ஏற்றுக்கொள்ள வேண்டும் என வலியுறுத்திய அவர், அதற்கான ஏற்பாடுகளை பொலிஸார் உரிய முறையில் மேற்கொண்டிருக்க வேண்டும் எனவும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here