இலங்கை சுங்கம், அக்டோபர் மாதம் 01 ஆம் திகதி முதல் அமுல்படுத்த திட்டமிட்டுள்ள “காகிதமற்ற சுங்க அறிவிப்பு முறை” தொடர்பாக சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கு தெளிவுபடுத்தும் விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளது.
இது குறித்து ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜனாதிபதி செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாரநாயக்கவின் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (11) பிற்பகல் இந்த விசேட கலந்துரையாடல் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை சுங்கத்தால் அமுல்படுத்த திட்டமிடப்பட்டுள்ள காகிதமற்ற சுங்க அறிவிப்பு முறை, அதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் இலங்கை சுங்கத்தின் தொழில்நுட்ப தயார்நிலை குறித்து சுங்கத் திணைக்களம் மற்றும் வருமான நிர்வாக சீர்திருத்த பிரிவினால் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கு விரிவான விளக்கம் அளிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த செயற்பாட்டிற்காக இலங்கை சுங்கமும் ஜனாதிபதி அலுவலகத்தின் வருமான நிர்வாக சீர்திருத்தம் மற்றும் நவீனமயமாக்கல் பிரிவும் இணைந்து வழங்கும் பங்களிப்பு சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளின் பாராட்டை பெற்றது.
மேலும், இந்த திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு தேவையான ஒத்துழைப்பை வழங்கவும் அவர்கள் இணக்கம் தெரிவித்தனர்.
இந்த நிகழ்வில் ஜனாதிபதி அலுவலகத்தின் வருமான நிர்வாக சீர்திருத்தம் மற்றும் நவீனமயமாக்கல் பிரிவின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் சிவாலி அருகொட, இலங்கை சுங்க பணிப்பாளர் நாயகம் விமல் லியனகம மற்றும் வருமான நிர்வாக சீர்திருத்தம் மற்றும் நவீனமயமாக்கல் பிரிவு மற்றும் இலங்கை சுங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் குழு, சர்வதேச நாணய நிதிய பிரதி நிதிகள் கலந்து கொண்டனர்.








