புத்தகப் பூச்சிகளாக இருப்பதால் எமது அறிவு விருத்தியடையாது. நாட்டு நடப்புக்களையும் நாம் அறிந்து கொள்ளவேண்டும். பத்திரிகைகளைப் படிக்கவேண்டும். எமது பாடப்புத்தகங்களுக்கு மேலதிகமாக படிக்கும் ஒவ்வொரு விடயங்களும் எமது அறிவை விருத்தி செய்யும். இன்றைய இளைய சமூகத்தை அதனை நோக்கித் தள்ளவேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.

பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தேசிய வாசிப்பு மாத பரிசளிப்பு நிகழ்வும், ‘பச்சிலை’ மலர் வெளியீடும், பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தலைமை அலுவலக மாநாட்டு மண்டபத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை (28.01.2025) பிரதேச சபையின் செயலர் திருமதி த.தர்சினி தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பங்கேற்ற ஆளுநர், நிகழ்வுகளில் பங்குபற்றியோருக்கான பரிசில்களை வழங்கி வைத்ததுடன், ‘பச்சிலை’ நூலையும் வெளியிட்டு வைத்தார்.

தொடர்ந்து பிரதம விருந்தினர் உரையாற்றிய ஆளுநர், அரசாங்க அதிகாரிகள் மக்களுக்கு சேவை செய்கின்றோம் என்பதை மறந்து செயற்படுகின்றனர். கௌரவ ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்கள், அரச சேவையில் மக்கள் நம்பிக்கை வைக்கும்படி செயற்படவேண்டும் என்று திரும்பத் திரும்பச் சொல்லி வருகின்றார். ஆனால் சில அரசாங்க திணைக்களத்தின் அதிகாரிகளை நினைத்து வெட்கப்படுகின்றேன்.

பொதுமக்கள் தினத்தில் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமகன் என்னை வந்து சந்தித்தார். அவர் தனது கடிதத்தில் வடக்கு மாகாண ஆளுநர் ஊடாக கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள ஒரு பிரதேச செயலருக்கு முகவரியிட்டிருந்தார். உண்மையில், பிரதேச செயலர் ஊடாகத்தான் ஆளுநருக்கு வரவேண்டும். அவ்வாறு ஏன் செய்துள்ளீர்கள் என்று கேட்டபோது, நீங்கள் சொன்னால்தான் அவர்கள் செய்வார்கள். அதனால்தான் அப்படி எழுதியிருக்கின்றேன் என அந்தப் பொதுமகன் பதிலளித்தார். இது வேதனையானது. பொதுமக்களை அவ்வாறு எண்ணும் அளவுக்கு எங்கள் அதிகாரிகளின் செயற்பாடுகள் இருந்திருக்கின்றன. அதிகாரிகள் சிலர் இலஞ்சம் பெற்றுப் பழகிவிட்டார்கள். மக்கள் அப்படிப்பட்டவர்களை நம்பவில்லை. அடியோடு வெறுகின்றார்கள். இந்த விடயங்களில் நாங்கள் மாற்றங்களை ஏற்படுத்தாமல் எதையும் செய்ய முடியாது.

 

பொதுமக்களை காக்க வைப்பதும், அவர்களை அலைக்கழிப்பதும்தான் உயர் அதிகாரிகளின் கதிரைக்கு பெருமை என்று சில அதிகாரிகள் நினைக்கின்றனர். அது தவறு. மக்களுக்கு தேடித் தேடி உதவிகளைச் செய்யவேண்டும். போதுமான பணியாளர்கள் அலுவலகத்தில் இருக்கின்றார்கள். எனவே அவர்களை உரியமுறையில் நெறிப்படுத்தி மக்களுக்கு தேடிச் சென்று சேவையாற்றச் செய்யவேண்டும். நாங்கள் பெற்றுக் கொள்கின்ற சம்பளத்துக்கு பணியாற்றவேண்டும். ஓர் ஏழைக்கு உதவி செய்ய எந்தவொரு சுற்றறிக்கையும் தடையாக இருக்காது. ஓர் ஏழைக்குச் செய்யும் உதவி கடவுளுக்குச் செய்யும் உதவிக்கு நிகரானது. கடமையைச் செய் பலனை எதிர்பாராதே என்று சொல்வார்கள். ஏழைக்குச் செய்யும் உதவிதான் பலனை எதிர்பாராதது. ஏனையோருக்குச் செய்யும் உதவிகள் பலனை எதிர்பார்த்ததே.

அஸ்வெசும நலன்புரி திட்டத்துக்கு தகுதியான பலரை கடந்த காலத்தில் உள்வாங்கவில்லை. தேவையற்றவர்கள் அதனுள் உள்வாங்கப்பட்டிருக்கின்றார்கள். இது எங்கள் அதிகாரிகளின் தவறு. விளிம்புநிலையில் உள்ள உண்மையில் உதவி தேவைப்பட்ட மக்கள் என்னை தினமும் சந்தித்து கண்ணீர் விட்டு அழுகின்றார்கள். அந்த மக்களுக்கு நாங்கள் உதவி செய்யவேண்டும். உதவி தேவையானவர்களுக்கே அதனைச் செய்யவேண்டும்.

எமது மாகாணத்தில் வேலை வாய்ப்புக்களை உருவாக்க வேண்டும் என்றால் முதலீட்டாளர்கள் வரவேண்டும். முதலீட்டாளர்கள் வருவதற்கு தயாராக இருந்தாலும் அவர்களைக் கவரும் விதத்தில் எங்கள் அதிகாரிகளின் செயற்பாடுகள் அமையவேண்டும். முதலீட்டாளர்களை தட்டிக் கழிக்கும் வகையில் அவர்கள் திரும்பிச் செல்லும் வகையில் அதிகாரிகள் செயற்படுவதை தவிர்த்துக்கொள்ளவேண்டும். முதலீட்டாளர்களை நாங்கள் வருமாறு அழைக்கின்றோம். அப்படி வருகின்ற முதலீட்டாளர்களை எமது மாகாணத்தில் முதலிடுவதற்கு ஏதுவான வாய்ப்புக்களையும் நாம் ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும், என்று ஆளுநர் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் த.ஜெயசீலன், கிளிநொச்சி உள்ளூராட்சி உதவி ஆணையாளர் ப.சத்தியராகவன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

[யாழ் நிருபர் – விஜய்குமார் லோஜன்]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here