உலகெங்கிலும் வாழும் முஸ்லிம்களால் மிகவும் மரியாதையுடன் கொண்டாடப்படும் முஹம்மத் நபியின் பிறந்த தினமான, மீலாதுன் நபி தினம் இன்றாகும்.
சமூகத்தில் நிலவும் இடைவெளிகளை நீக்கி, மக்களின் இதயங்களில் சமத்துவத்தை விதைப்பதற்கான போராட்டத்தைத் தொடங்கிய நபியவர்களின் முன்மாதிரி, இன்று நாம் எதிர்கொள்ளும் சமூக சவால்களை முறியடித்து, சமத்துவம், சட்டத்தை மதித்தல் மற்றும் நல்லொழுக்கம் நிறைந்த ஒரு நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான நமது முயற்சிகளில் ஒளிவிளக்காக இருக்கும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
மீலாதுன் நபி தினத்தையொட்டி அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியிலே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இறுதி நபியான முஹம்மது நபி, சன்மார்க்க சமுதாயத்தைக் கட்டியெழுப்பத் தம்மை அர்ப்பணித்து, அதற்காகப் பெரும் பணியை ஆற்றியவர்.
பிளவுபட்ட அரபு சமூகத்திற்குப் பதிலாக,இஸ்லாத்தின் அடிப்படையையும் அர்த்தத்தையும் சுமக்கின்ற,சகோதரத்துவம், அமைதி மற்றும் தியாகத்தை மனதில் கொண்டு உன்னத விழுமியங்கள் நிறைந்த சமுதாயத்தை உருவாக்க, 23 வருடங்களாக, முஹம்மத் நபி தனது பிரசங்கம், செயற்பாடுகள், தியாகம் மற்றும் வாழ்க்கை முன்மாதிரி மூலம் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார்.
இனம், சாதி, நிறம் என்ற வகையில் எந்தவொரு நபரும் மற்றொருவரை விட உயர்ந்தவரோ தாழ்ந்தவரோ அல்ல என்ற சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட மகத்துவமான கருத்தே அவரது போதனைகளின் அடித்தளமாகும்.
சகல விதத்திலும் வீழ்ச்சியடைந்துள்ள எமது சமூகத்திற்கு மனிதாபிமானத்தையும் அன்பையும் வழங்கி புதிய நெறிமுறையின் அடிப்படையில் நாட்டை மேம்படுத்தும் எமது முயற்சியில், எம்முடன் இணைந்துள்ள நீங்களும் நபிகளாரின் உண்மையான வாழ்க்கை முன்மாதிரியை வாழ்க்கைக்கு நெருக்கமாக எடுத்து, இந்த மீலாதுன் நபி தினத்தை மென்மேலும் அர்த்தமுள்ளதாக்க உங்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறேன் ” என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அவரது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.








