மனித உயிருக்கு கடுமையான அச்சுறுத்தலாக இருக்கும் புற்றுநோயை எதிர்கொள்வதற்கான உலகளாவிய முயற்சிகளில், கொழும்பு பல்கலைக்கழகத்தின் உயிர்வேதியியல், மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிரி தொழில்நுட்ப நிறுவனம் ஒரு பெரிய சாதனையைப் பதிவு செய்துள்ளது.
புற்றுநோய் செல்களை அழிக்கும் திறன் கொண்ட ஊட்டச்சத்து மருந்தை கண்டுபிடிக்க ஆராய்ச்சியாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
2008ஆம் ஆண்டிலிருந்து சுமார் 17 ஆண்டுகளாக முன்னெடுக்கப்பட்ட ஆய்வின் விளைவாக உருவாக்கப்பட்ட இந்த மருந்து, மூலக்கூறு உயிரியல் மற்றும் நெட்வொர்க் மருந்தியல் போன்ற நவீன அறிவியல் முறைகளைப் பயன்படுத்தி ஐந்து மருத்துவ தாவரங்களிலிருந்து தயாரிக்கப்பட்டுள்ளது.
வெர்னோனியா ஜெய்லானிகா, நிஜெல்லா சாடிவா, ஹெமிடெஸ்மஸ் இண்டிகஸ், லூகாஸ் ஜெய்லானிகா மற்றும் ஸ்மைலாக்ஸ் கிளாப்ரா ஆகிய தாவரங்களின் கலவையிலிருந்து உருவாக்கப்பட்ட இந்த மருந்து புற்றுநோய் செல்களை அழிக்கக்கூடியது என பேராசிரியர் சமீரா ஆர். சமரக்கோன் தலைமையிலான ஆராய்ச்சி குழு தெரிவித்துள்ளது.
உலகளவில் ஆண்டுதோறும் சுமார் 10 மில்லியன் பேர் புற்றுநோயால் உயிரிழப்பதோடு, இலங்கையிலேயே 15,000 முதல் 20,000 பேர் வரை உயிரிழக்கின்றனர்.
இந்நிலையில், இந்த புதிய கண்டுபிடிப்பு புற்றுநோய்க்கு எதிரான உலகளாவிய போராட்டத்தில் ஒரு முக்கியமான மைல்கல்லாகக் கருதப்படுகிறது.







