சமூக ஊடக குழுக்கள் மூலம் பெண்கள் மற்றும் சிறுவர்களின் தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் பாலியல் உள்ளடக்கங்களை பெறுவது, விற்பது தொடர்பான இணைய வலையமைப்பு ஒன்று செயல்படுவதாக கிடைத்த தகவல் தொடர்பில் பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு பொலிஸாருக்கு அறிவித்துள்ளது.
அமைச்சிற்கு கிடைத்த தகவலின்படி, சமூக ஊடகங்களில் இயங்கும் சில குழுக்களில் இதுபோன்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் விற்பனைக்கு வைக்கப்படுவதாகவும், அவற்றை பயனர்கள் தேடுவதாகவும் தெரியவந்துள்ளது.
போலி கணக்குகள் பயன்படுத்தப்பட்டு, கணக்கு வைத்திருப்பவர்களுக்கு நெருக்கமானவர்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வழங்கப்படுவதாக விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் சிலர் தங்கள் குடும்பத்தைச் சேர்ந்த பெண்களின் புகைப்படங்களை விநியோகிக்க முயற்சிப்பதும் அவதானிக்கப்பட்டுள்ளது.
இந்த குழுக்களில் பல வெளிநாடுகளில் இருந்து இயக்கப்படுவதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.
பொலிஸ் நடவடிக்கை மூலம்
சேகரிக்கப்பட்ட தகவல்கள் மேலதிக விசாரணைக்காக இலங்கை பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் மற்றும் கணினி குற்ற புலனாய்வு பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
பொதுமக்களுக்கான அறிவுறுத்தல்
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் சமூக ஊடக பாவனையை உன்னிப்பாக கண்காணிக்குமாறும், அவர்கள் யாருடன் தொடர்பு கொள்கிறார்கள் என்பதை அறிந்திருக்குமாறும் அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும் தங்கள் குடும்ப உறுப்பினர் யாரேனும் இதுபோன்ற செயலில் பாதிக்கப்பட்டவராகவோ அல்லது ஈடுபட்டவராகவோ இருப்பதாக சந்தேகம் இருந்தால், 1938 மற்றும் 1929 ஆகிய இலவச உதவி தொலைபேசி இலக்கங்கள் மூலம் உதவி கோரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்கள் மற்றும் சிறுவர்கள் பாதிக்கப்படுவதை தடுக்க அவசர நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அமைச்சு உறுதியளித்துள்ளது.








