நாட்டில் யுத்தம் தொடர்ந்த காலத்தில் திருகோணமலையில் இரண்டு பெண்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் தொடர்புடையதாக கூறப்படும் இலங்கை கடற்படையின் ஓய்வு பெற்ற இரண்டு பெண் அதிகாரிகள் எதிர்வரும் அக்டோபர் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இரண்டு சந்தேக நபர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை பிரதான நீதவான் எம்.எஸ்.எம். சம்சுதீன் உத்தரவிட்டதுடன், அவர்களை அக்டோபர் 5 ஆம் திகதி அடையாள அணிவகுப்புக்கு முன்னிலைப்படுத்துமாறும் பணித்தார்.

சிலாபம் மற்றும் ஹப்புத்தளையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற குறித்த அதிகாரிகள், மற்றொரு நீதிமன்ற வழக்கு தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முன்னிலையான போது கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் திருகோணமலை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

2008 மே 13 ஆம் திகதி அல்லது அதனை அண்டிய தினத்தில் திருகோணமலை பாலையூற்று பகுதியைச் சேர்ந்த சசிகுமார் தேன்மொழி மற்றும் மேரி டெல்சியா என அடையாளம் காணப்பட்ட இரண்டு பெண்கள் கடத்தப்பட்டதாக கூறப்படுவது தொடர்பிலேயே விசாரணை நடைபெறுகிறது.

இது தொடர்பான அறிக்கைகளின்படி, இரண்டு சந்தேக நபர்களும் சேவையில் இருந்தபோது, இரண்டு பெண்களும் திருகோணமலை கடற்படைத் தளத்திற்குள் கன் சைட் “Gun Site” எனப்படும் நிலத்தடி இடத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக விசாரணைகளின் போது கண்டறியப்பட்ட தகவல்கள் தெரிவிப்பதாக CID நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளது. பின்னர் குறித்த பெண்கள் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டது.

“Gun Site” என்பது திருகோணமலை கடற்படைத் தளத்திற்குள் அமைந்துள்ள நிலத்தடி தடுப்பு வசதி என கூறப்படுகிறது, இது கிழக்கு கடற்படை கட்டளை மற்றும் இலங்கை கடற்படை கப்பல் தளத்தை கொண்டுள்ளது.

குறித்த இடம் ஒரு சிறிய குன்றின் மீது அமைந்துள்ள பழைய துப்பாக்கி நிலையத்திலிருந்து அதன் பெயரைப் பெற்றதாகவும், இயற்கை ஒளி கிடைக்காத நிலத்தடி சிறைகள் உட்பட காலனித்துவ கால கட்டமைப்புகளைக் கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் குறித்த இடம் அங்கீகரிக்கப்படாத தடுப்பு வசதியாக பயன்படுத்தப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன 2025 ஆம் ஆண்டு சி.ஐ.டி விசாரணையின் போது இந்த இடம் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட சிறைச்சாலை அல்ல என்பதை ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.

இந்த வசதி உத்தியோகபூர்வ கடற்படை புலனாய்வு பிரிவிலிருந்து வேறுபட்ட “விசேட புலனாய்வு பிரிவு” ஒன்றால் இயக்கப்பட்டதாகவும், கமாண்டர் டி.கே.பி. தசநாயக்கவின் கட்டளையின் கீழ் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

கைதிகளை அந்த வசதிக்கு கொண்டு செல்ல வெள்ளை வான்கள் பயன்படுத்தப்பட்டதாகவும், அந்த வாகனங்கள் கடற்படைத் தளத்தின் நுழைவாயிலில் பதிவு செய்யப்படவில்லை என்றும் சாட்சிகள் புலனாய்வாளர்களிடம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

கடத்தல் மற்றும் காணாமல் போனமை தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here