
நாட்டில் முன் பருவக் குழந்தைகளின் டிஜிட்டல் திரைப் பயன்பாட்டில் வேகமான அதிகரிப்பு காணப்படுவதாக சுகாதார அமைச்சின் செயலாளர் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி, முன் பருவக் குழந்தைகளில் 64 சதவீதமானோர் நாளொன்றுக்கு அரை மணித்தியாலத்திற்கு மேல் கையடக்கத் தொலைபேசி அல்லது கணினி பார்த்து நேரத்தை செலவிடுவதாக தெரியவந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைகளுக்குமைய, சிறு குழந்தை ஒருவர் டிஜிட்டல் திரைகளை பயன்படுத்த வேண்டியது நாளொன்றுக்கு அரை மணித்தியாலத்திற்கும் குறைவான நேரமே என விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.
இந்த நிலைமையை கருத்தில் கொண்டு, முன்பள்ளி சிறார்களுக்கான சுகாதார மேம்பாட்டு வேலைத்திட்டம் மற்றும் வழிகாட்டி தொகுப்பு ஒன்றை அறிமுகப்படுத்த சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இது தொடர்பாக தெளிவுப்படுத்துவதற்காக சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அமைச்சின் செயலாளர் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க இந்த விடயத்தை தெரிவித்தார்.







